நீர் நிலைகள் பாதுகாப்பு சங்க கவன ஈர்ப்பு கூட்டம்

செஞ்சி: செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் நலன் மற்றும் நீர ்நிலைகள் பாதுகாப்பு சங்கம், வடக்கு மண்டல விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் நடந்தது.
மாநில துணைத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்கள் ரவி, வெங்கடேன், விவசாய சங்கம் ஸ்ரீதர், கிருஷ்ணன், குமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் அறவாழி வரவேற்றார்.
கூட்டத்தில், நந்தன் கால்வாய் இணைப்பு திட்டத்திற்கு, 28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி. செஞ்சி தொகுதியில் பெஞ்சல் புயலால் சேதமடைந்த சோகுப்பம், பாக்கம், புதுப்பாளையம் பகுதி கால்வாய்களை சீரமைக்க 74.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.
மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தை நடத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து, ஆறுகளில் தடுப்பணைகள் அமைத்து உபரி நீரை சேமிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குப்புசாமி, காங்., மாவட்ட தலைவர் ரங்க பூபதி, தி.மு.க. தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ம.நே.ம.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சையத் உஸ்மான், ம.தி.மு.க. இளைஞரணி தலைவர் பெரியார் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
மாநில துணை பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.