Crime, law and justice
கன்டெய்னர் லாரியில் வந்து ஏ.டி.எம் உடைப்பு... போலீஸுக்கே சவால்விடும் மேவாட் கொள்ளையர்கள்!

நெடுஞ்சாலையோர ஏ.டி.எம்-களைக் குறிவைப்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். இயந்திரத்தை உடைப்பது, அலாரத்தைச் செயலிழக்கச் செய்வது, சிசிடிவி-யில் பதிவாகாமல் தப்புவது என அனைத்திலும் தேர்ச்சிபெற்றவர்கள்.
நெடுஞ்சாலையோர ஏ.டி.எம்-களைக் குறிவைப்பார்கள்... காஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை அள்ளுவார்கள்... பின்னர் கன்டெய்னர் லாரியில் தப்பி, அதற்குள் கொண்டுவந்த காரில் சொந்த மாவட்டத்துக்கே சென்றுவிடுவார்கள். இதுதான் போலீஸாரால் ‘மேவாட் கொள்ளையர்கள்’ என அழைக்கப்படும் கும்பலின் பாணி. சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த மூன்று ஏ.டி.எம் கொள்ளைகளிலும் இதே பாணியைப் பின்பற்றிய கும்பலைத் தேடி, தாம்பரம் போலீஸாரின் தனிப்படை ஹரியானாவில் முகாமிட்டிருக்கிறது.
சிக்கிய மேவாட் கும்பலின் தடம்!
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சோமங்கலத்தை அடுத்த புதுப்பேட்டிலுள்ள ஏ.டி.எம் மையத்தில், ஆகஸ்ட் 25-ம் தேதி கொள்ளை நடந்தது. ஏ.டி.எம்-மிலிருந்த அபாய அலாரத்தை செயலிழக்கச் செய்து, சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே அடித்த கொள்ளையர்கள், காஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை உடைத்து சுமார் 9 லட்சம் ரூபாயை அள்ளிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், ஆகஸ்ட் 27-ம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இரண்டு ஏ.டி.எம்-களிலும் அடுத்தடுத்து கொள்ளை நடந்தது. மூன்று சம்பவங்களிலும் ஒரே பாணி கடைப்பிடிக்கப்பட்டிருந்ததால், ஒரே கும்பல்தான் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
சிசிடிவி காட்சிகள், கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபோது, இந்தக் கொள்ளைகளின் பின்னணியில் ஹரியானாவைச் சேர்ந்த ‘மேவாட் கொள்ளையர்கள்’ இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை ஹரியானாவுக்குப் புறப்பட்டது.
ஹரியானா கிராமங்களில் பதுங்கும் கொள்ளையர்கள்!
மேவாட் கொள்ளையர்களின் பின்னணி குறித்துத் தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தோம். “ஹரியானா மாநிலம், நூஹ் (Nuh) மாவட்டம்தான் முன்பு, `மேவாட் மாவட்டம்’ என்று அழைக்கப்பட்டது. ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள குறிப்பிட்ட கொள்ளைக் கும்பலையே ‘மேவாட் கொள்ளையர்கள்’ என்று அழைக்கிறோம். இவர்கள் மீது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஏ.டி.எம் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. 2023 பிப்ரவரியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நான்கு ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்து சுமார் 72 லட்சம் ரூபாயை அள்ளிச் சென்றனர். 2024-ல் கேரளாவில் கொள்ளையடித்த கும்பல், தமிழகம் வழியாகத் தப்பிச் செல்லும்போது பிடிபட்டது.
நெடுஞ்சாலையோர ஏ.டி.எம்-களைக் குறிவைப்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். இயந்திரத்தை உடைப்பது, அலாரத்தைச் செயலிழக்கச் செய்வது, சிசிடிவி-யில் பதிவாகாமல் தப்புவது என அனைத்திலும் தேர்ச்சிபெற்றவர்கள். ஒரு மாநிலத்துக்குள் வந்தால், ஒன்றிரண்டு ஏ.டி.எம்-களுடன் நிறுத்திக்கொள்ளாமல், தொடர்ந்து பல ஏ.டி.எம் மையங்களைக் குறிவைப்பார்கள். சில நேரங்களில் 10 முதல் 20 ஏ.டி.எம்-களில் கொள்ளையடித்துவிட்டு, சொந்த மாநிலத்துக்குத் திரும்பிவிடுவார்கள்.
அவர்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் ஹரியானா போலீஸாரே எளிதில் நுழைய முடியாத சூழல் உள்ளது. போலீஸார் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டால், அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடிவிடுவார்கள். சில நேரங்களில் போலீஸாரைச் சுற்றி நின்று தடுத்து, கொள்ளையர்கள் காட்டுப்பகுதிக்குள் தப்பிச் செல்லவும் வழிவகை செய்வார்கள். கொள்ளையடித்த பணத்திலும் ஒரு பகுதியை ஊருக்காகவும், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட செலவுகளுக்காகவும் ஒதுக்கிவிட்டு மீதியைப் பங்கிட்டுக்கொள்வார்கள். இதனால் கைதுசெய்தாலும் முழுப் பணத்தையும் மீட்பது சவாலாக இருக்கும். சோமங்கலம், கும்மிடிப்பூண்டி கொள்ளைகளிலும் இதே கும்பல்தான் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிப்பதற்காக ஒரு வாரத்துக்கும் மேலாக ஹரியானாவில் முகாமிட்டிருக்கிறோம். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் தீவிரமாகத் தேடிவருகிறோம்” என்றனர்.
காட்டிக்கொடுத்த செல்போன்!
ஏ.டி.எம் கொள்ளை குறித்து சோமங்கலம் போலீஸாரிடம் பேசினோம். “கொள்ளை நடந்த சில மணி நேரத்திலேயே தகவல் கிடைத்ததால் உடனடியாக ஆக்ஷனில் இறங்கினோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரியில் வந்து, பின்னர் அதற்குள் இருந்த சொகுசு காரில் தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக தெலங்கானா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தோம். அவர்கள் அந்த காரை மடக்கினர். ஆனால், கொள்ளையர்கள் துப்பாக்கிகளைக் காட்டி தப்பி, தேசிய நெடுஞ்சாலையோரக் காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். பின்னர், தெலங்கானா- மகாராஷ்டிரா எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் தப்பும்போது தவறவிட்ட செல்போன் ஒன்றுதான் அவர்களின் பின்னணியை எங்களுக்குக் காட்டிக்கொடுத்தது. அதிலிருந்த தகவல்களின் அடிப்படையில் ஹரியானாவில் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நாங்கள் தேடிவந்த மேவாட் கொள்ளையர்களில் ஒருவரான பவன்குமார், வேறு ஒரு குற்ற வழக்கில் ஜெய்ப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, சோமங்கலம், கும்மிடிப்பூண்டி ஏ.டி.எம் கொள்ளைகளில் பவன்குமார் தலைமையிலான டீம்தான் ஈடுபட்டிருப்பது உறுதியானது. அவரை விசாரிக்க சட்டப்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றனர்.
கொள்ளையர்கள் கைதாவார்களா... கொள்ளைபோனப் பணம் மீட்கப்படுமா?!
