Lifestyle and human interest
10 வரை படிப்பு, 25 பெண்களுக்கு வாழ்வாதாரம்... காரைக்குடி ‘அக்கா மீன் சாப்பாடு’ கடை... அசத்தும் தீபா!

‘`இன்னிக்கு சோஷியல் மீடியா விளம்பரங்கள் மூலமா எங்கக் கடை தமிழ்நாட்டோட பல பகுதிகளுக்கும், ஏன் வெளிநாடுகள்ல இருக்குற வங்களுக்குக்கூடத் தெரியவந்திருக்கு. ஆரம்பத் துல கேமரா முன்னாடி நிக்கவே பயந்தேன்.
காரைக்குடி பெரியார் சிலை அருகில் உள்ள ‘அக்கா மீன் சாப்பாடு’ கடைக்குள் நுழைந்ததும் மீன் வறுவலின் வாசம் நாசியைத் துளைக்கிறது. வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகிறது கடை. பரபரப்பான சமையல் பணிக் கிடையில், இன்முகத்துடன் வாடிக்கையாளர்களை உபசரித்துக்கொண்டிருந்தார் தீபா. அங்கு வேலை பார்க்கும் பெண்களும் அன்போடு உணவைப் பரிமாறிக் கொண்டிருந் தனர். பரபரப்பு ஓயும்வரை காத்திருந்து தீபாவிடம் பேசினோம்.
“ என் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை கிராமம். பத்தாவது வரை படிச்சிருக்கேன். 2007-ம் வருஷம், திருமணமான நிலையில கிராமத்துலேருந்து நாங்க காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தோம். ஆரம்பத்துல என்ன பண்ணணும், எப்படி வாழ்க்கையை நடத்தணும்னு எதுவுமே தெரியல. ‘நமக்குதான் டெய்லரிங் தெரியுமே, அதை ஏன் ஒரு தொழிலா ஆரம்பிக்கக் கூடாது’ன்னு ஒருநாள் தோணுச்சு. அழகப்பா பல்கலைக்கழகத்துல டெய்லரிங் கோர்ஸ்ல சேர்ந்தேன். ‘பெஸ்ட் ஸ்டூடென்ட்’ என்ற பெயரையும் வாங்கினேன். அப்புறம் சொந்தமா ‘எம்எம் என்டர்பிரைசஸ்’ என்ற பெயர்ல டெய் லரிங் இன்ஸ்டிடியூட் ஆரம்பிச்சு, வகுப்புகள் எடுத்திட்டிருந்தேன்...’’
`நான் இயல்பாவே நல்லா சமைப்பேன். லாக்டௌன் நேரத்துல வீட்டுல சும்மா இருந்த போது என் குடும்பத்தாருக்கு விதவிதமா சமைச்சுக் கொடுத்துப் பழகினேன்.
கடல் உணவுகள் மேல மக்களுக்கு இருக்குற பிரியம் எனக்கு நல்லா தெரியும். அதனால காரைக்குடிக்கு வந்தவுடனே, கிராமத்துச் சுவையோட செட்டிநாடு ஸ்டைலையும் மிக்ஸ் பண்ணி ஓர் உணவகம் ஆரம்பிச்சா என்னன்னு யோசிச்சேன். ‘டெய்லரிங் இன்ஸ்டிட்யூட் நல்லாத்தானே போயிட்டிருக்கு... அதைவிட்டுட்டு சமையல் வேலையெல்லாம் தேவையா’ன்னு பலரும் கேட்டாங்க. ஆனா, நான் என் முடிவுல உறுதியா இருந்தேன். 2023-ல காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில ‘அக்கா மீன் சாப்பாடு’ கடையை ஆரம்பிச்சோம்...’’
‘`இன்னிக்கு சோஷியல் மீடியா விளம்பரங்கள் மூலமா எங்கக் கடை தமிழ்நாட்டோட பல பகுதிகளுக்கும், ஏன் வெளிநாடுகள்ல இருக்குற வங்களுக்குக்கூடத் தெரியவந்திருக்கு. ஆரம்பத் துல கேமரா முன்னாடி நிக்கவே பயந்தேன். என் தம்பிதான் எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்து, ‘அக்கா நீங்க கேமரா முன்னாடி வந்து பேசுங்க, அப்போதான் கடையை எல்லாரும் தெரிஞ்சுப்பாங்க’ன்னு ஊக்கப்படுத்தினான்.
இன்னிக்கு, பெரியார் சிலை பக்கத்துல பிரமாண்டமா ரெண்டாவது கிளையை ஆரம் பிச்சிட்டோம். எங்க ஊருக்குப் பக்கத்துல உள்ள தொண்டி கடற்கரையிலேருந்து நேரடியா ஃப்ரெஷ்ஷான மீன்களை வரவழைச்சு, சமைச்சுக் கொடுக்குறோம். இறால் கிரேவி, சுறா புட்டு, திருக்கை மீன் சுக்கா, அயிரை மீன் குழம்புனு வெறும் மீன் சாப்பாடு மட்டுமில்லாம, சிக்கன், மட்டன், நண்டுனு அசைவத்துல அத்தனை வெரைட்டியும் கொடுக்குறோம். ‘பொம்பளப் புள்ள தனியா கடை நடத்தப் போறாளா?’ன்னு ஆரம்பத்துல பலரும் சந்தேகப்பட்டாங்க. எனக்கு என் மேலயும், என் சமையல் கைமணத்துலயும் நம்பிக்கை இருந்தது.
கிராமத்துப் பெண்கள், ஆதரவில்லா தவங்கன்னு எங்கக் கடையில வேலை பார்க்குற 25 பேருமே பெண்கள்தான். அவங்கதான் எனக்குப் பெரிய பலமே. எங்களைப் போல கிராமப்புறப் பின்னணியில இருந்துவந்து, கஷ்டப்பட்டு முன்னேறத் துடிக்குற பெண்களுக்கு அரசாங்கம் இன்னும் கூடுதலான மானியங் களோடு கூடிய கடன் உதவிகளை நேரடியா வழங்கணும். கடனுக்காகப் பெண்கள் அலைக் கழிக்கப்படாம, எளிமையான முறையில அரசாங்கமே நேரடி உதவி செய்யணும்.’’
புதிய தலைமுறையின் பாய்ச்சல்!
அம்மாவின் உழைப்புக்குத் தோள் கொடுத்து, முதல் கிளையைத் தன் முழுப் பொறுப்பில் எடுத்து நடத்துகிறார் தீபாவின் 21 வயது மகள் ஜமுனா.
“நான் வெளிநாட்டுல ஃபேஷன் டிசைனிங் படிச்சு முடிச்சிட்டு வந்தப்போ, எல்லாரும் நான் கார்ப்பரேட் வேலைக்குத்தான் போவேன்னு நினைச்சாங்க. ஆனா, என் அம்மாவோட இந்தச் சுவை சாம்ராஜ்யத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போகணும்னு ஆசைப்பட்டேன். அதனால அம்மாவோட பிசினஸையே முழு நேரமா பார்த்துக்க ஆரம் பிச்சேன். இன்றைய இளைய தலைமுறையினர் ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துல சிக்கி உடம்பைக் கெடுத்துக்கறங்க. அந்த ஆபத்துலேருந்து அவங்களை மீட்டெடுத்து, ஆரோக்கிய உணவுகளை நோக்கி அவங்களைத் திசைத் திருப்பணும். காரைக்குடி அக்கா மீன் சாப்பாடு கடையை ஆரோக்கியமான பாரம்பர்ய உணவோட அடையாளமா மாத்தறதுதான் என் இலக்கு!” என்றார் நம்பிக்கையுடன்.
