கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (20)

(20) வீட்டோடு மாமனார்!
எங்களுடைய குழந்தைப் பருவத்தில் இரண்டறக் கலந்தவர், என் அம்மாவைப் பெற்ற தாத்தா சுப்பிரமணியம் ஐயர். கேரளத்தில் சுகாதாரத்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி தவறியவுடன் தன் ஒரே மகளான என் தாயுடன் எங்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்து விட்டார். மாப்பிள்ளையின்
நாடக விவகாரங்கள் முதலில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும், பின்னர் மனம் சமாதானமாகி மகள் குடும்பத்திற்காக உழைக்கத் தொடங்கிவிட்டார்.
அப்பா அரசாங்க வேலை யை விட்டுவிடப் போவதை அறிந்து ஜோதிடரிடம் கலந்தாலோசித்தார். "உங்கள் மாப்பிள்ளைக்கு இந்தத் துறையில் யானை கட்டி தீனி போடும் அளவுக்கு அந்தஸ்து கிடைக்கும் கவலைப்படாதீர்' என்று ஜோதிடர் கூறிவிட்டாராம். அதன் பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார் தாத்தா. அப்புறம் தாத்தா எங்களுக்கு அப்பாவின் ஸ்தானத்திலிருந்து எங்கள் பள்ளி மற்றும் இத்யாதி விஷயங்களையும் கவனித்துக்கொள்ள அம்மாவுக்கு உதவினார்.
அப்பா சிறுகச் சிறுக சேர்த்த சேமிப்பையும் கவனமாக முதலீடு செய்து, ஓரளவு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். வீட்டில் வாகன வசதியிருந்தும் எங்கு செல்வதற்கும் சைக்கிள்தான் பயன்படுத்துவார், எளிமையானவர்.
மாமனார்-மாப்பிள்ளை உறவு கொஞ்சம் வினோதமாகக்கூடயிருக்கும்... இருவரும் பேசிக் கொள்ளவேமாட்டார்கள். தாத்தா, அப்பாவுக்கு மதிய உணவோடு பழங்களையும் அழகாக நறுக்கி வைப்பார். அவருடைய சிறு சிறு தேவைகளை மின்னல் வேகத்தில் செய்து முடிப்பார். அவர் நீட்டிய காகிதத்தில் அப்பா கையெழுத்திடுவார். அப்பாவுக்காக தயாரிப்பாளர் அலுவலகம் சென்று காசோலை வாங்கி வருவார். கடைசிவரையில் எங்கள் குடும்பத்தில் ஒரு தூணாகவே வாழ்ந்தார்.
தாத்தா என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள் அப்போது கவிதாலயா தயாரித்த (பூவேலி ) "விநியோகஸ்தர் பேமெண்ட் அனுப்பி விட்டாரா' என்பதுதான். தாத்தா இறந்தபோது சொந்த மகன் போல ஈமக்கிரியைகள் தொடர்பான காரியங்களை ஒரு குறைவுமில்லாமல் செய்தார் அப்பா.
நான் ரோசரி மெட்ரிகுலேஷன் என்ற அருமையான கான்வென்ட்டில் பள்ளி இறுதிவரை படித்தேன். கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள் நடத்தும் பள்ளி அது. ஆதலால் சினிமா பற்றிய பேச்செல்லாம் ஆதரிக்கமாட்டார்கள். பாடம் நடத்திய ஆசிரியைகளுக்கு அப்பா ஒரு பிரபலமான இயக்குனர் என்றும் மிகப்பெரிய ஆளுமை என்றும் தெரியும். நானும் பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்று சிறந்த மாணவியாகத் திகழ்ந்ததால் என்னை அன்போடும் பாசத்தோடும் அணுகினார்கள்.
பள்ளியில் நடக்கும் பெற்றோர் -ஆசிரியர் சந்திப்புகளுக்கு அம்மாதான் வருவார். ஆனால் கடைசி வருடம் தலைமை ஆசிரியை, "உன் அப்பாவை கட்டாயம் வரச்சொல்' என்று கூறிவிட்டார்கள். அதுவரையில் அப்பா பள்ளிக்கு வந்ததே கிடையாது. அப்போது அப்பா, "அவர்கள்' படத்தின் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வந்தார். தலைமை ஆசிரியைக்கு ரொம்ப சந்தோஷம். என்னைப் பற்றி பேசியதோடு, "உங்கள் மகளை மாநில அளவில் ரேங்க் வாங்குமாறு படிக்க வைங்க' என்று கூறிவிட்டார்
மெட்ரிகுலேஷன் தேர்வில் அந்த வருடம் மாநில அளவில் இரண்டாம் ரேங்க் மற்றும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சியானது என் இளவயது வாழ்க்கையின் ஆகச் சிறந்த நிகழ்வாகும்.
அப்பாவைப் பற்றி அம்மா சொன்னதில் நினைவில் உள்ள சில விஷ யங்கள்...
"புதுப்படம் ஆரம் பிக்கும் நாளிலும் கூட இவர் எந்த டென்ஷனும் இல்லாமல் இயல்பாக இருப்பார். அவர் இயக்கிய படம் ரிலீஸாகும்போது ஸ்பெஷலா கோயிலுக்குப் போவதோ, பூஜை செய்வதோ கிடையாது. மனதுக்குள்ளயே கடவுளை வேண்டிக்கொள்வார். செய்யும் தொழிலே தெய்வம் என்று சுறுசுறுப்பாகப் பணியாற்றுபவர். வெளிப் படையாக கடவுளிடம் எதையும் வேண்டிக் கொண்டதை நான் பார்த்த தில்லை. புத்தகங்கள் படிப்பார் அதைவிட அதிகம் சிந்திப்பார். தூங்குவதற்கு முன்னால் பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பார். தனது வேலை எதையும் செய்ய பிறரை எதிர்பார்க்கமாட்டார். டெலிபோன் மணி அடித்தாலும் அவரே எடுத்துப் பேசுவார். மிகச் சுருக்கமாக பேசுவார். தேவையில்லாத விஷயத்திற்கு அதிக நேரம் செலவிடமாட்டார். தனது ஒவ்வொரு நிமிடத்தையும் மிகக்கவனமாக செலவிடுவார். எதற்காகவும் காத்துக்கொண்டி ருப்பது அவருக்குப் பிடிக்காது. அதேபோல் மற்றவர்களைக் காக்க வைப்பதும் பிடிக்காது. இவையெல்லாம் அப்பாவிடம் இருந்த சிறந்த பண்புகள்.
கன்னட நடிகர்களை தேடி அறிமுகம் செய்தது ஏன்.. காரணம் என்ன?
(சொல்கிறேன்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)