Crime, law and justice
“மாத்தி போட்டுட்டோம் நண்பா… மன்னிச்சிடு!” - டி-ஷர்ட் நிறத்தால் கொலையான நபர்
ஆனந்த் ஏற்கெனவே ரௌடி பரத் கொலை வழக்கில் இருந்ததால், அவரின் ஆதரவாளர்கள்தான் தன்னைக் கொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, தப்பித்து ஓடியிருக்கிறான். | murder case in puducherry

மதுக்கடையில் பீர் பாட்டிலால் தாக்கிய நபரைப் பழிதீர்க்கச் சென்ற போதைக் கும்பல், அடையாளம் தெரியாமல் வேறு ஒருவரை வெட்டிப் படுகொலைசெய்த சம்பவம், புதுச்சேரி மக்களைக் குலைநடுங்க வைத்திருக்கிறது!
தலையைக் குறிவைத்துச் சிதைத்த கும்பல்!
புதுச்சேரி கோவிந்தசாலைப் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி பரத் என்பவர், 2023-ம் ஆண்டு வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்ற கோவிந்தசாலை ஆனந்த், ஜாமீனில் வந்து மீண்டும் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி நள்ளிரவு சவாரியை முடித்து விட்டு வந்து வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தார் ஆனந்த். அப்போது திடீரென கத்தி, அரிவாள்களுடன் அங்கு வந்த கும்பல், ஆனந்தைச் சுற்றிவளைக்க முயன்றது. நமக்கு `ஸ்கெட்ச்’ போட்டுவிட்டார்கள் என்று உணர்ந்துகொண்ட ஆனந்த், ``காப்பாத்துங்க… காப்பாத்துங்க…’’ என்று அலறியவாறே அங்கிருந்து தப்பித்து ஓடினார்.
ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற கும்பல், புதிதாகக் கட்டப்பட்டு வரும் உப்பனாறு வாய்க்காலில் அவரை மடக்கிப் பிடித்தது. அதையடுத்து அவரது தலையைக் குறிவைத்து சரமாரியாக வெட்டியது. அதில் நிலைதடுமாறி விழுந்த ஆனந்த், அதே இடத்தில் துள்ளத் துடிக்க உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்திய கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. இதற்கிடையில் ஆனந்த் துரத்திச் செல்லப்பட்டதை அறிந்த அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களின் பின்னாலேயே ஓடினர். ஆனால், அதற்குள் ஆனந்த் உயிரிழந்துவிட, அவரது சடலத்தைப் பார்த்துக் கதறியழுதனர். தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற உருளையன்பேட்டை போலீஸார், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு சோதனைக்காக, கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த உருளையன்பேட்டை போலீஸார், ஆனந்த் வீட்டிலிருந்து அவர் கொலை செய்யப்பட்ட பகுதி வரையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதனடிப்படையில், சாரதி, வெங்கடேசன், காளியப்பன், விஷ்ணு, இனியவன், சக்திவேல் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
டி-ஷர்ட் நிறத்தால் அரங்கேறிய கொலை!
இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து உருளையன்பேட்டை விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம். ``ஆகஸ்ட் 30-ம் தேதி ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சாரதி தன் நண்பர்களுடன் அண்ணாசாலையில் இருக்கும் ஒரு பாரில் மது குடித்திருக்கிறான். அதேபோல, கோவிந்தசாலைப் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவனும் அதே பாரில் மது குடித்துக்கொண்டிருந்தான். அப்போது, சைடிஷ் கேட்பதற்காக பார் ஊழியரைத் தேடியிருக்கிறான் செபாஸ்டின். அதைப் பார்த்த சாரதி, `ஏண்டா என்னைப் பார்த்து முறைச்சிக்கிட்டிருக்க… பெரிய ரௌடியா நீ... நான் ஆட்டுப்பட்டி ஏரியாடா’ என்று செபாஸ்டியனிடம் கூறியிருக்கிறார். அதற்கு செபாஸ்டின், `நான் கோவிந்தசாலைடா’ என்று சொல்ல, இருவரும் பீர் பாட்டில்களால் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து இருவரையும் அங்கிருந்து வெளியேற்றியிருக்கின்றனர் பார் ஊழியர்கள்.
இதையடுத்து அடிவாங்கிய சாரதி, செபாஸ்டினைக் கொலைசெய்வதற்காகத் தன் நண்பர்களுடன் கோவிந்தசாலை பகுதிக்குச் சென்றிருக்கிறான். பாரில் நடைபெற்ற தகராறின் போதுதான் முதன்முறையாக செபாஸ்டியனை சாரதி பார்த்திருந்ததால், சரிவர முக அடையாளம் நினைவில் இல்லை. இந்தச் சூழலில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஆனந்த், செபாஸ்டின் அணிந்திருந்த அதே நிறத்தில் டி-ஷர்ட் அணிந்திருந்ததால், `அவன்தாண்டா… போடுங்கடா…’ என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறான் சாரதி. இதையடுத்துதான் ஆனந்த்தைச் சுத்துப் போட்டிருக்கிறார்கள்.
ஆனந்த் ஏற்கெனவே ரௌடி பரத் கொலை வழக்கில் இருந்ததால், அவரின் ஆதரவாளர்கள்தான் தன்னைக் கொல்ல வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, தப்பித்து ஓடியிருக்கிறான். ஆனந்த் தப்பித்து ஓடியதால், அவன்தான் தன்னை அடித்த செபாஸ்டியன் என நினைத்து, துரத்திக்கொண்டு போய் கொலைசெய்து விட்டான் சாரதி” என்றனர் விரிவாக.
‘`மாத்தி போட்டுட்டோம் நண்பா... மன்னிச்சுடு...’’
இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய க்ரைம் பிரிவு போலீஸார், ``தலையில் சரமாரியாக வெட்டு வாங்கிய ஆனந்த் சுருண்டு விழுந்ததும், தன்னைத் தாக்கியது அவன் இல்லை என்பது சாரதிக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், அப்படியேவிட்டால் புதிதாக ஒரு பகை ஏற்பட்டுவிடுமே என்று நினைத்த சாரதி தரப்பினர், `மாத்திப் போட்டுட்டோம் நண்பா… மன்னிச்சிடு… கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும்’ என்று உயிரை விட்டுக்கொண்டிருந்த ஆனந்த்திடம் சொல்லிவிட்டு தலையைச் சிதைத்திருக்கிறார்கள்” என்றனர்.
புதுச்சேரியில் நள்ளிரவைத் தாண்டியும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இப்படியான சூழலில் அரங்கேறியிருக்கும் இந்தக் கொலை, புதுச்சேரி மக்களை நடுநடுங்கவைத்திருக்கிறது!
