Lifestyle and human interest
ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட்டை புறக்கணிக்கும் விருதுநகர் கோட்ட அரசு பஸ்கள்: அலட்சியத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்:நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தை தொடர்ந்து விருதுநகர் கோட்ட அரசு பஸ்களும் இரவு நேரங்களில் கூட ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதில்லை. இதை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் நகர் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, மதுரை, தேனி, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாகர்கோயில், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கோட்ட அரசு பஸ்களே அதிகளவில் இயங்கி வருகிறது. இவைகளில் பெரும்பாலான பஸ்கள் ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்வதில்லை. பகல் நேரத்தில் கூட போக்குவரத்து நெருக்கடி இருக்கும் என்பதால் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டு சர்ச் சந்திப்பில் இறங்கி தங்கள் வீடுகளுக்கு செல்கின்றனர்.
ஆனால், இரவு 10:00 மணிக்கு மேல் பஜார் வீதியில் கடைகள் அடைக்கப்பட்டு எந்த வித போக்குவரத்து நெருக்கடியும் இல்லாத நிலையில் கூட பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்லாமல் சர்ச் சந்திப்பிலேயே இறக்கி விட்டு செல்கின்றனர்.
இதில் இதுவரை நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை கோட்ட பஸ்கள் மட்டுமே இதுவரை இப்படி நடந்து கொண்ட நிலையில் தற்போது விருதுநகர் கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ்களும், குறிப்பாக ராஜபாளையம் 1 மற்றும் 2 டிப்போக்களை சேர்ந்த பஸ்களும் இவ்வாறு செய்வதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்
இதனால் நள்ளிரவு நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு வரும் பயணிகளின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெர்மிட் படி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லாத அரசு , தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்துஅதிகாரிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையில் இருப்பதால் கர்ப்பிணிகளும், முதியவர்களும் மிகுந்த மனவேதனையில் உள்ளது.
சொந்த மாவட்ட பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் இருக்கும் பஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.