4 மண்டலங்களில் சீரானது குடிநீர் வினியோகம்
சென்னை: புழல் ஜி.என்.டி., சாலையில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதை அடுத்து, மாதவரம் உட்பட நான்கு மண்டலங்களில், குழாய்களில் குடிநீர் விநியோகம் தொடங்கியதாக, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
புழல் ஏரி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினமும், 30 கோடி லிட்டர் குடிநீர், திரு.வி.க., நகர், மணலி உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளுக்கு, குழாய் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக, ஜி.என்.டி., சாலைக்கு அடியில், 1,200 எம்.எம்., விட்டம் உடைய குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த குழாய் பதித்து, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்நிலையில் புழல் சைக்கிள் ஷாப் பேருந்து நிறுத்தம் அருகே, ஜி.என்.டி., சாலை, கடந்த 7ம் தேதி அதிகாலை திடீரென உள்வாங்கியது.
சாலை அடியில் புதைக்கப்பட்டிருந்த ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பால், 15 அடி அகலம், 25 அடி ஆழத்தில், பிரமாண்ட பள்ளம் விழுந்தது. சாலையில் குடிநீர் வீணானது. மாதவரம் உள்ளிட்ட நான்கு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில், குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை இப்பணி நிறைவடைந்தது.
இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புழலில் சேதமடைந்த 24 அடி நீள குழாய் மாற்றும் பணி இன்று – நேற்று – முடிந்தது. இதையடுத்து, மணலி, மாதவரம், தண்டையர்பேட்டை, திரு.வி.க., நகர் மண்டலங்களில், குழாய்வழியே குடிநீர் விநியோகம் தொடங்கியது. ஏற்கனவே வழங்கப்பட்ட குடிநீர் அளவைவிட, கூடுதலாக குடிநீர் வழங்கப்படுகிறது. அழுத்தம் குறைவான, இணைப்பு இல்லாத பகுதிகளில் லாரி குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.