Politics
பாகுபாடான தண்டனையால் அரசு நிர்வாகத்துக்கு சிக்கல் வராதா?

தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கும் தொழில் நகரம் தூத்துக்குடி. அங்கு தாமிரம் உருவாக்கும் நிறுவனமாக அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தால், மக்கள் சுகாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்ற கொந்தளிப்போடு, அந்த நிறுவனத்தை மூடச் சொல்லி அங்கிருக்கும் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். ‘போராட்டத்தைக் கட்டுப்படுத்துகிறோம்’ என்ற பெயரில், அரசுத் தரப்பு போலீஸார் வாயிலாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில், 13 பேர் துள்ளத் துடிக்க இறந்துபோயினர்.
இதற்கு நியாயம் கேட்டு சமூக ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும் பெரும் குரல் எழுப்பியதும், அப்போதைய அ.தி.மு.க அரசு, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. ஆணையம் பலகட்ட விசாரணை நடத்தி, அரசுக்குத் தன்னுடைய பரிந்துரைகளை அளித்தது. அதில் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.
ஆணையத்தின் பரிந்துரையை ஏற்ற அரசுத் தரப்பு, அதில் பாதியளவுக்கு நடவடிக்கை எடுத்தது. கீழ்நிலையிலுள்ள அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுத்த அரசு, உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டது.
அன்றைக்கு போலீஸ் எஸ்.பி-யாக இருந்தவர், இரு புரொமோஷன்கள் பெற்று, தற்போது ஐ.ஜி-யாக இருக்கிறார். அதேபோல, பல உயரதிகாரிகளும், அடுத்தடுத்த புரொமோஷன்களைப் பெற்று, பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். ‘கீழ்நிலையிலுள்ள போலீஸாருக்குத் துப்பாக்கிச்சூடு நடத்தச் சொல்லி உத்தரவிட்டவர்களெல்லாம், ஆணையப் பரிந்துரைக்குப் பின்பும் எந்தச் சிக்கலும் இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருக்க, உத்தரவை நிறைவேற்றிய எங்கள்மீது மட்டும் ஏன் நடவடிக்கை?’ எனக் கேட்டு கீழ்நிலை போலீஸார் கொந்தளிக்கின்றனர். அதே நிலைதான் வருவாய்த்துறையிலும் நிலவுகிறது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ‘தவறு என்றால், உயர்நிலை, கீழ்நிலை அதிகாரிகள் என எல்லோருக்கும் பொதுவானதுதானே... அரசு ஏன் இதில் பாகுபாடு காட்டியிருக்கிறது?’ என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்கு அரசுத் தரப்பில் பதிலளித்திருக்கிறார்கள். அதில், ‘வழக்கை விசாரித்துக்கொண்டிருக்கும் சி.பி.ஐ பரிந்துரையின் பேரில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட உயரதிகாரிகள்மீது துறைரீதியான நடவடிக்கை தேவையில்லை என அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... ஆணையப் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அனைத்து நிலைகளிலும் இருக்கும் அதிகாரிகள்மீது சமமான நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவதுதானே முறையாக இருக்கும்?
அதை விடுத்து, ஒரு தரப்பாருக்கு மட்டும் தண்டனை என்றால், அரசு ஊழியர்களின் நடத்தையிலேயே இனி மாற்றம் ஏற்படும். உயரதிகாரிகளின் உத்தரவை இனி வரும் காலங்களில் கீழ்நிலை ஊழியர்கள் எப்படி நிறைவேற்ற முன்வருவார்கள்... சீரான அரசு நடவடிக்கைகளுக்கு அதுவே பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
