Economy, business and finance
'மூன்று' ரூட்டுகளில் இந்தியாவிற்குள் வந்த அமெரிக்க டாலர்கள்; Strong ஆன இந்திய ரூபாய் மதிப்பு!
RBI நடவடிக்கைகள், FCNR-B டெபாசிட்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் இந்திய ரூபாய் மதிப்பை வலுப்படுத்தியுள்ளன|Despite oil prices above $90 and the Iran war, the rupee stays below ₹95, helped by RBI measures, FCNR-B deposits and foreign inflows.

ஈரான் போர், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல், எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்திய ரூபாய் ரூ.95-க்கு கீழ் வலுவாக இருப்பதன் காரணம் என்ன?
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே, இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு ரூ.94-95 என வலுவாகியிருக்கிறது.
கடந்த இரண்டு நாள்களாக, சற்று இறக்கத்தைக் கண்டாலும், இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் ரூ.95-க்குக் கீழேயே இருப்பது நல்ல செய்திதான்.
ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருப்பதால், எண்ணெய் போக்குவரத்து கடினமாக உள்ளது.
இதனால், உலகச் சந்தையில் எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களுக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. இவை உலகத்தின் தற்போதைய முக்கியச் செய்திகள்.
இதே நிலை..
ஆனால், இதே நிலை முன்பு இருந்தபோது, இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்தது. அப்போது அமெரிக்க டாலருக்கு எதிராகக் கிட்டத்தட்ட ரூ.97-ஐ எல்லாம் தொட்டது.
இதற்கு மிக முக்கியக் காரணம், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் முக்கியமாக எண்ணெய்யின் விலை மிக அதிகமாக இருந்தது. இந்த இறக்குமதிகளுக்கு டாலரை அதிக அளவில் பயன்படுத்தியதால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.
இப்போது உலக நிலவரம் முன்பு போல தீவிரமாக இல்லாமல், கொஞ்சம் தணிந்திருந்தாலும், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு இப்போதும் 90 டாலருக்கு மேல் தான் இருக்கிறது.
ஆகையால், தற்போது இந்திய ரூபாய் மதிப்பு சற்று சரிந்திருக்கத்தான் வேண்டும். மாறாக, அது வலுவாகியிருப்பது நிச்சயம் ஆச்சர்யம்தான்.
இந்த ஆச்சர்யத்திற்குப் பின்னால், இந்திய ரிசர்வ் வங்கியின் சில நடவடிக்கைகள் உள்ளன.
முதலில், இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தபோது, இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் Foreign Currency Non-Resident Bank (FCNR-B) டெபாசிட்டுகளுக்கு சில சலுகைகளை வழங்கியது.
Foreign Currency Non-Resident Bank (FCNR-B) என்றால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுடைய வெளிநாட்டுப் பணத்தை அப்படியே நமது வங்கிகளில் டெபாசிட் செய்யலாம்.
இதன் மூலம், இந்திய சந்தைக்குள் டாலர்கள் வரும். அதிக டாலர்கள் உள்ளே வரும் போது, அதன் மவுசு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வலுவாக இருக்கும். இதுதான் இந்திய ரிசர்வ் வங்கியின் பிளான்.
இந்த டெபாசிட்டுகளுக்கு வட்டியை அதிகரித்ததால், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் தங்களுடைய பணத்தை அதிகம் டெபாசிட் செய்தனர்.
இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானது.
இரண்டாவதாக, இந்திய ரூபாயின் மதிப்பை வலுவாக்க, இந்திய ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட 8 பில்லியன் டாலர்களைச் சந்தைக்குள் ரொட்டேஷனுக்கு கொண்டு வந்திருக்கிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
மேலே சொன்ன அதே லாஜிக் தான். ஒரு இடத்தில் குறிப்பிட்ட பொருள் மிகுந்திருக்கும் போது, அதன் டிமாண்ட் தானாக குறையும்.
இதனால், சந்தைக்குள் இந்திய ரிசர்வ் வங்கி அதனிடம் இருந்த 8 பில்லியன் டாலரை கொண்டு வந்துள்ளது.
டாலர் சப்ளை அதிகரிக்கும் போது, அதன் டிமாண்ட் குறைந்து, இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியைத் தாண்டி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த வாரம், இந்திய பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள்.
இவர்கள் தங்களது முதலீடுகளை டாலராக இந்திய சந்தைக்குள் கொண்டு வரும் போது, இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.
ஆக, அமெரிக்க டாலர் இந்திய சந்தைக்குள் அதிகம் வந்திருக்கிறது. இதனால், இந்திய ரூபாயின் மதிப்பும் வலுவாகி உள்ளது.
