இஸ்லாமியர்களின் கை, கண் ரேகைகளைப் பதிவு செய்யும் காவல்துறை; அச்சத்தில் மேலப்பாளையம் பகுதி!

இஸ்லாமியர்களை காவல்நிலையத்திற்கு வரவழைத்து அவர்களின் கை, கண் ரேகைகளை போலீசார் பதிவு செய்வதால் பீதியும் அச்சத்திலும் இருக்கிறது மேலப்பாளையம் நகரம்.நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் நகரில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் வசித்து வருகின்றனர்.
தற்போது நெல்லை மாநகர காவல்துறை சார்பில் மேலப்பாளையத்திலுள்ள இஸ்லாமியர்களை, அந்தக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை என்ற பெயரில் அம்மக்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்களை ரேஷன் கடைகளில் படம் எடுப்பது போன்று பல கோணங்களில் புகைப்படம் எடுத்தும், கையெழுத்து பெற்றும், கை ரேகை மற்றும் கண் ரேகைகளை பதிவு செய்த பின்னரே அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் சுமார், 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களிடமும் தற்போது தகவல் சேகரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. வேறு மாநிலங்களில் உள்ள வழக்குகளில் இங்குள்ளவர்களுக்கு தொடர்புள்ளதா என்பதை அறியவே இந்த நடவடிக்கை. இதுபோன்ற விசாரணை, கை ரேகை, கண் ரேகை பதிவு தமிழகம் முழுவதிலும் நடத்தப்படுகிறது என்று விளக்கமளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேலப்பாளையம் பகுதி மக்கள் அச்சத்திற்கும் கடும் நெருக்கடிக்கும் ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில், ‘நெல்லை மேலப்பாளையம் பகுதியில் முஸ்லீம்களுக்கு எவ்வித அழைப்பாணையும் வழங்காமல் காவல்நிலையத்திற்கு அழைத்து அவர்களின் கை ரேகை கண் ரேகை போன்றவற்றை எடுப்பதாக தகவல்கள் வருகின்றன. அத்தோடு பல்வேறு கோணங்களில் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு கையெழுத்து வாங்கி வீட்டிற்கு அனுப்பும் வேலையை நெல்லை மாநகர காவல்துறை செய்து வருகிறது. இவ்வாறு தகவல் சேகரிக்கப்பட்டவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய சமுதாய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவருகிறது. இதுகுறித்து காவல்துறையிடம் விளக்கம் கேட்டால், வேறு மாநில வழக்குகளை பரிசோதிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுகின்றனர். இதன் மூலம் மேலப்பாளையம் முஸ்லீம்களை வேறு மாநில வழக்குகளில் சிக்க வைக்க சதி நடக்கிறதோ என்கிற அச்சமும் எழுகிறது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளை எப்போதுமே பதற்றமாக வைத்திருக்கும் சூழலை காவல்துறை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை காவல்துறை கைவிடவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளரான பிலால், ‘சம்மன் இல்லாமல் இப்படி வரவழைத்து கை ரேகைகள் கண் ரேகைகளை பதிவு செய்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர்களுக்கு வெளி மாநிலத்தில் ஏதேனும் வழக்கு இருக்கிறது என்பதை செக் செய்வதற்காக எடுக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்படுபவர்கள், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை நீங்க கை ரேகை கண் ரேகை எடுங்கள். ஆனால் குடும்பத்தோடு கூலி பிழைப்பு நடத்தி வருபவர்களை காவல்நிலையத்திற்கு அழைக்கும் போது, ஏன் இப்படி என்ன ஏது போன்ற கண்ணோட்டத்தோடு பார்ப்பதோடு, குடும்பம் சுற்றத்தார் அவர்களை தனிமைப்படுத்துகிற விதமாகவும் அமைந்துவிடும். அதனால் அவர்களது வாழ்வே கேள்வியாகிவிடும் என்கிற அச்சம் நிலவுகிறது. இதுபோன்ற செயல்களால் மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சமும் நிலவி வருகிறது’ என்றார்.
இதைப்போன்றே கம்யூனிஸ்ட் கட்சியினரின் விபரங்களை கணக்கெடுக்க சமீபத்தில் திண்டுக்கல் மாவட்ட குஜிலியம்பாறை தாசில்தார் சுற்றறிக்கை வெளியிட்டது பரபரப்பையும் அரசியல் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக அது கைவிடப்பட்டு தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. அதே போன்று மேலப்பாளையத்தில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)