Crime, law and justice
``கொடூர காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றுவதுதான் பெரிய தண்டனையா?’’ - தாளவாடி ஸ்டேஷன் வன்முறை விவகாரம்!

அதன் பிறகு மகாதேவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக் கிறார்கள் காவல்துறையினர். மகாதேவாவை கட்டிவைத்து.
இளைஞர் ஒருவரின் கைகளை இரும்புச் சங்கிலியால் ஜன்னலுடன் கட்டிவைத்து காவல்துறையினர் மிகக் கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ காட்சிகள் சமீபத்தில் இணையதளத்தில் பரவி, காண்போரை பதைபதைக்க வைத்தன. ஈரோடு மாவட்டம், தாளவாடி காவல் துறையினரால் கடந்த 2024-ம் ஆண்டு இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து அறிய களமிறங்கினோம்.
சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “தாளவாடி, திகினாரை கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கட்டட தொழிலாளியான மகாதேவா என்ற இளைஞரை, கடந்த 2024-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தாளவாடி ஸ்டேஷனுக்கு காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக் கிறார்கள். ஸ்டேஷன் பின்புறம் உள்ள காவலர்களுக்கான ஓய்வு அறையில் மகா தேவாவை அடைத்து வைத்த காவல் துறையினர், உண்மையை ஒப்புக்கொள்ளச் சொல்லி கடுமையாக சித்ரவதை செய்து வந்திருக்கிறார்கள். மேலும், அந்த இளைஞருக் குத் தொடர்பில்லாத மற்றொரு வழக்கு ஒன்றிலும் தொடர்பு இருப்பதாகச் சொல்லி அதையும் ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தி கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.
அதன் பிறகு மகாதேவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக் கிறார்கள் காவல்துறையினர். மகாதேவாவை கட்டிவைத்து. கொடூரமாக தாக்கியதை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் அப்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மேற்கு மண்டல ஐ.ஜி-யின் கவனத்துக்குச் சென்று தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால், அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, `இது தற்போதைய ஆட்சியில் நடக்கவில்லை, போன ஆட்சியில் நடந்தது’ எனச் சப்பைக்கட்டு கட்டி விளக்குவதிலேயே குறியாக இருக்கிறது” என்றார் ஆதங்கத்துடன்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யா பாரதியிடம் கேட்டோம். “அது பழைய வீடியோ. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்ட எஸ்.பி- யிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என முடித்துக் கொண்டார்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், “2024-ல் நடந்த இந்தச் சம்பவம் குறித்து இந்த வீடியோ மூலம் தற்போதுதான் எங்களது கவனத்திற்கு வந்திருக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினோம். உதவி ஆய்வாளர் மார்ட்டின் லூதர், தலைமை காவலர் தனபால் ஆகிய இருவர் ஆயுதப்படைக்கு மாற்றப் பட்டுள்ளனர். மற்றொருவர் டிரான்ஸ்ஃபர் பெற்று ஈரோடு சென்றுள்ளார். அவர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மூன்று காவலர்கள் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
இந்த காவல் சித்திரவதை மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் பூமொழி, “மனித உரிமைகளை மீறி இரக்கமற்ற முறையில் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர் காவலர்கள். அவர்களை ஆயுதப்படைக்கு மாற்றுவதைத்தான் பெரிய தண்டனையாக அதிகாரிகள் கொடுத்திருக்கிறார்கள். மேலும், `இது பழைய சம்பவம். தற்போதைய ஆட்சியில் இதுபோன்று காவல்துறையில் நடக்கவில்லை’ என்று சொல்லி முடித்துக் கொண்டார்கள்.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை நடந்து, தற்போதுதான் அந்தக் கொலை குறித்து வெளியில் தெரிய வருகிறது என்றால், அது பழைய சம்பவம் என விட முடியுமா? வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா? இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவேளை குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், தண்டிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திடம் இருக்கிறது. காவல்துறை எப்படிச் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு காவல்நிலைய வன்முறையில் தொடர்ந்து ஈடுபட முடியும்?’’ என்று கேள்வி எழுப்பிய வழக்கறிஞர் பூமொழி, காவல்துறை விசாரணை அத்துமீறல்கள் குறித்து கண்டித்தார்.
’’சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறைக்குப் பல்வேறு வழிகாட்டு தல்களை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன. ஆனால், அனைத்தை யும் புறந்தள்ளிவிட்டு எதேச்சதிகார போக்கில் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உடனடியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மாநில, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டது மட்டுமன்றி, குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் மிகக் கொடூரமாக இளைஞரைத் தாக்கிய தாளவாடி காவலர்களை அரசு காப்பாற்றி வரும் செயல், இதுபோன்ற கொடூரங்களை ஊக்குவிக்கும் வகையிலேயே அமையும் எனக் கண்டிக்கிறார்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் சட்ட ஆர்வலர்களும்.
என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது அரசு?

