பத்திரப்பதிவு துறையில் ரூ.7.83 கோடி வருவாய் இழப்பு; சட்டசபையில் அறிக்கை தாக்கல்

சென்னை: கடந்த, 2023 - 24ம் நிதி ஆண்டில், பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் விபரம்: தமிழகத்தில் மொத்தம் உள்ள 983 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 2023 - 24ம் நிதி ஆண்டில், 647 சார் - பதிவாளர் அலுவலகங்களில், 114 மாதிரிகள் எடுக்கப்பட்டு, தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இந்த அலுவலகங்களில், 2023 - 24ம் நிதி ஆண்டில், 13,303 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, 2022- 23ம் நிதி ஆண்டில் ஈட்டப்பட்ட வருவாயில், 75.76 சதவீதம் தான் என்பது தணிக்கையில் தெரியவந்தது. திருப்போரூர், பூந்தமல்லி சார் - பதிவாளர் அலுவலகங்களில், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூன்றாம் தரப்புக்கு விற்பதற்காக நிலம் வாங்கியுள்ளனர்.
அதில், அதிக விலையை குறிப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தால், துறைக்கு, 7.83 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்துார் மற்றும் தாமல் சார் - பதிவாளர் அலுவலகங்களில், பொது அதிகார ஆவணங்கள் பதிவு செய்ததில், 4.99 கோடி ரூபாய் முத்திரை தீர்வை வசூலிக்கப்படாமல் விடுபட்டுள்ளது.
சங்ககிரி சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஒரு குறிப்பிட்ட பத்திரத்தில் வழிகாட்டி மதிப்பை தவறாக கடைப்பிடித்ததால், 47.21 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.புரசைவாக்கம் மற்றும் சென்னை தெற்கு சார் - பதிவாளர் அலுவலகங்களில், சொத்து பரிமாற்றத்தில் பத்திரத்தின் வகைப்பாடு தவறாக கடைப்பிடிக்கப்பட்டதால், 1.60 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை, வருவாய் துறை வாயிலாக இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்துக்காக, நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதில், வருவாய் துறையினர் நிலத்தின் மதிப்பை சரியாக கணக்கிடாததால், 4.35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.