மின் உற்பத்திக்கு நீர் திறப்பு சோலையாறு அணையில் நீர்மட்டம் சரிவு

வால்பாறை: மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பதால், சோலையாறு அணையின் நீர்மட்டம், 83 அடியாக சரிந்தது.
வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் உயர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
பருவ மழை நிறைவடையும் தருவாயிலும், பாசன திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான சோலையாறு அணை நிரம்பாததால், பி.ஏ.பி., விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இந்நிலையில், அணையின் நீர்இருப்பை பொறுத்து, கேரளாவுக்கு ஒப்பந்தப்படி சோலையாறில் இருந்து ஆண்டு தோறும், 12.3 டி.எம்.சி.,தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், நேற்று முதல் கேரள சோலையாறுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
மழைப்பொழிவு குறைந்த நிலையிலும், மானாம்பள்ளி பவர் ஹவுஸ் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு, 924 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
தற்போது, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 83.74 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு, 465 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 50.92 அடியாகவும், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 67.15 அடியாகவும் இருந்தது.
36 மெகாவாட் உற்பத்தி சோலையாறு அணையின் நீர்இருப்பை பொறுத்து நாள் தோறும், 109 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால், மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்தில், 36 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அணைகளின் நீர்மட்டம் சரிந்ததால், மின் உற்பத்தி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.