Politics
“ரூ.50 லட்சம் வசூல் பண்றோம்... போலீஸுக்கும் கட்டிங் தர்றோம்!”

வேலூரை சீரழிக்கும் ‘லாட்டரி’ மாஃபியாக்கள்
வேலூரில் பலருடைய வாழ்வாதாரத்தைச் சீரழித்துக்கொண்டிருக்கும் வெளிமாநில லாட்டரிகளின் விற்பனையைத் தடுக்காமல், உள்ளூர் போலீஸாரே உடந்தையாக இருப்பதாகப் பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. ‘மாதத்துக்கு ரூ.50 லட்சம் டார்கெட்’ வைத்து வசூல் செய்யப்படுவதாகக் கூறப்படும் இந்த லாட்டரி விற்பனை குறித்து களத்தில் இறங்கி விசாரித்தோம்.
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், வெளிமாநில லாட்டரிகளின் பெயரில் பல்வேறு வகையான சூதாட்டங்கள் இன்றளவும் புழக்கத்தில் இருக்கின்றன. குறிப்பாக, வேலூர் மாநகரில் காவல் நிலையத்துக்கு அருகிலேயே லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து சில அடி தூரத்தில் ‘காதிபவன்’ அருகேயுள்ள சந்து அறை ஒன்றில், தினமும் காலையிலேயே அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் லாட்டரிச் சீட்டுகளை வாங்குவதற்காகக் குவிகின்றனர். வறுமையையும், ஒரே நாளில் பணக்காரராகிவிடலாம் என்ற ஆசையையும் மூலதனமாக்கி இந்தக் கும்பல் லட்சக்கணக்கில் பணம் சுருட்டுகிறது.
“இன்னைக்கு சாயங்காலம் மூணு மணிக்கு ரிசல்ட். எனக்குப் பரிசு விழுந்தா கடனெல்லாம் தீர்ந்துடும்” என்ற நம்பிக்கையுடன் பலரும் லாட்டரி வாங்கிச் செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் இதை ‘கேரள அரசின் லாட்டரி’ என்றே நம்புகிறார்கள். உண்மையில் அது கேரள அரசின் லாட்டரியா என்பதை அறிய, நாமும் ஒருநாள் காலையில் அந்தச் சந்து அறைக்குச் சென்றோம். லாட்ஜுக்கு வெளியே இருவர் கண்காணித்துக்கொண்டிருந்த நிலையில், உள்ளே சென்றபோது 10-க்கும் மேற்பட்டோர் வரிசையாக அமர்ந்து லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்துகொண்டிருந்தனர்.
‘தங்கம்’, ‘குயில்’, ‘ரோசா’, ‘சிங்கம்’, ‘குமரன்’, ‘டியர்’, ‘நல்ல நேரம்’, ‘விஷ்ணு’, ‘ஸ்வர்ண லட்சுமி’ எனப் பல பெயர்களில் லாட்டரிச் சீட்டுகள் அச்சிடப்பட்டிருந்தன. நாமும் ஆதாரத்துக்காக ‘தங்கம்’, ‘குயில்’, ‘ரோசா’ ஆகிய சீட்டுகளை ரூ.540 கொடுத்து வாங்கினோம். அந்தச் சீட்டுகளில் தேதி, டிக்கெட் எண், குலுக்கலைக் குறிக்கும் டிரா குறியீடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. விசாரித்தபோது, “மாலை 3 மணிக்குப் பரிசு எண்கள் அறிவிக்கப்படும். ‘போடோலாந்து’ இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்கலாம். இணையத்தில் பார்க்கத் தெரியவில்லை என்றால், மறுநாள் காலை இங்கே வந்து பார்த்துக்கொள்ளலாம்” என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
அப்போதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது. இவை கேரள அரசின் லாட்டரிகள் அல்ல; அஸ்ஸாம் மாநிலத்தின் ‘போடோலாந்து’ லாட்டரி என்ற பெயரில் விற்பனை செய்யப் படுபவை. அதில் ‘தங்கம்’, ‘குயில்’, ‘ரோசா’, ‘நல்ல நேரம்’ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், வேலூரில் விற்பனை செய்யப்படும் சீட்டுகள் உண்மையான அரசு லாட்டரிச் சீட்டுகள்தானா என்ற சந்தேகமும் எழுகிறது. காரணம், அவை சாதாரண வெள்ளைக் காகிதத்தில் பிரின்ட்அவுட் எடுத்ததைப்போலக் காட்சியளிக்கின்றன. வழக்கமான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சந்தேகங்கள் எழும் வகையில் பார் கோடு, செக்யூரிட்டி மார்க்ஸ் உள்ளிட்டவை தெளிவாகக் காணப்படவில்லை. இந்தச் சந்தேகம் எதுவும் தெரியாமல் தினமும் 300 முதல் 400 பேர் வரை ரூ.500 முதல் ரூ.1,000 வரை செலவு செய்து லாட்டரி வாங்கிச் செல்கிறார்களாம்.
இது குறித்து விவரமறிந் தவர்கள் கூறுகையில், “தினமும் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. மாதத்துக்கு ரூ.50 லட்சம் வரை வசூலாகிறது. இதில் போலீஸுக்கு ‘கட்டிங்’ கொடுத்தது போக, மீதியை மாஃபியா கும்பல் வைத்துக் கொள்கிறார்கள். வாங்குபவர்களைத் தக்கவைக்க அடிக்கடி சிறு பரிசுகளையும் கொடுக்கிறார்கள்” என்றார்கள்.
தொடர்ந்து லாட்டரி வாங்கும் சில கூலித் தொழிலாளர்களிடம் பேசியபோது, “தங்கம், டியர் டிக்கெட்டுகள் தலா ரூ.90; நல்ல நேரம் ரூ.180; குமரன் ரூ.360; ஸ்வர்ண லட்சுமி ரூ.900. பரிசுத்தொகை ரூ.50 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும். எங்கள்ல யாருக்கும் பெரிய பரிசு விழுந்ததில்லை. ஆனா, அவ்வப்போது சிலருக்குச் சின்னதா பரிசு விழுது. போலீஸுக்குத் தெரிஞ்சுதான் இது நடக்குது. நாங்க இருக்கும்போதே வந்து ‘கனமான’ கவர்கள்ல மாமூல் வாங்கிட்டுப் போவாங்க” என்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியிடம் விளக்கம் கேட்டோம். “போலீஸுக்குத் தெரிந்து லாட்டரி விற்பனை நடைபெறவில்லை. சொல்லிட்டீங்க... அதனால அந்த இடத்துக்குச் சென்று பார்க்கிறேன்” என்றார் சுருக்கமாக.
சட்டத்தைக் காக்கவேண்டிய கைகளே, சட்டவிரோத கும்பலுக்குக் குடை பிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தால், மக்களைக் காப்பது யார்?
