Politics
புதிய தலைமைச் செயலக விவகாரம் : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சி.பி.எம்.!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 3ஆம் தேதி (03.09.2026) சட்டமன்ற விதி 110-இன் கீழ், சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான மொத்தம் 25.55 ஏக்கர் நிலங்கள் புதிய கட்டிட வளாகம் கட்டுவதற்காக அடையாளம் காணப்பட்டன.
இதனையடுத்து 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகக் கட்டிட வளாகம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டது. அதே சமயம் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதற்குப் பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
அதோடு இந்த திட்டத்தைக் கைவிடக் கோரி பட்டினப்பாக்கத்தில் உள்ள சீனிவாசப்புரம் சந்திப்பில் வரும் 19ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீனவ அமைப்புகளை ஒன்றிணைத்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளன. அரசின் இந்த மக்கள் விரோதத் திட்டத்திற்கு எதிராகத் தீவிர பொதுமக்களைத் திரட்டி, திட்டத்தைக் கைவிடும் வரை தங்களது போராட்டங்கள் ஓயாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)