Politics
ராங்கால்! விஜய் சேதுபதியைக் கடிக்கும் விஜய் ரசிகர்கள்!

"ஹலோ தலைவரே, கடந்த 2024, ஜூன் 18, 19 தேதிகளில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியதால் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியினைச் சேர்ந்த 230 நபர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 69 நபர்கள் இறந்தனர். இது நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை வந்திருக்கு.''”
"ஆமாப்பா, தி.மு.க.வுக்கு எதிரா அறிக்கைவிட பயன்படும்னு, கிடப்பிலிருந்த இந்த அறிக்கையை ஆர்வமா த.வெ.க. அரசு அவசர அவசரமாக சமீபத்தில் ரிலீஸ் செய்ததே.''”
"ஆமாம் தலைவரே, ‘கள்ளச்சாராய மரணங் களுக்கு வெறும் சட்ட விரோத வியாபாரிகள் மட்டுமல்லாமல், மது விலக்கு சட்டங்களை அமல்படுத்தத் தவறிய காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளின் தீவிர அலட்சியமே காரணம்’ என்றது அறிக்கை. அதன்படி கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிரா பாளையம் வட்ட வி.ஏ.ஓ., ஆர்.ஐ.க்கள், தாசில்தார் கள், மதுவிலக்கு அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் என்றிருந்தது. டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ள காவல் துறையிலுள்ள சில உயரதிகாரிகளோ, "அன்றைய நாளில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி.யாக இருந்தவர் இன்றைய டி.ஜி.பி.யான மகேஷ்குமார் அகர்வால். சம்பவம் நடந்த அன்றே அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது தி.மு.க. அரசு. கோகுல்தாஸ் அறிக்கையின்படி அவரும் விஷச்சாராய சம்பவத்திற்கு பொறுப்பான வரே. கடைநிலை பதவியிலிருக்கும் காவல்துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அதிகாரிகளை மட்டும் தண்டனைக்குள்ளாக்குவது ஏன்? இன்றைய டி.ஜி.பி.யும் தண்டனைக்குரியவர் தானே?'’என அறிக்கையினை காரணம் காட்டி குரல்கொடுத்துள்ளனர். அதனால் இன்னும் சில நாட்களில் டி.ஜி.பி. மாற்றம் நிச்சயம் என்கின்றது காவல்துறை வட்டாரம்.''”
விஜய்யை கலாய்த்தாரா விஜய்சேதுபதி?
"விஜய் டி.வி.யில் தற்போது நடை பெற்று வரும் பிக்பாஸின் 10-ஆவது சீஸ னில் விஜய்யைக் கலாய்த்துப் பேசி னாராமே விஜய் சேதுபதி?''”
"பிக்பாஸ் நிகழ்வுக்காக, அதில் கலந்து கொண்டவர் களை இரு அணிகளாக பிரித்து ஒரு டாஸ்க் வைத்திருந்தார் விஜய் சேதுபதி. இதில் கேப்டன் ஷாதிகா தமது தலைமைப் பொறுப்பை சரியாகச் செய்தாரா என்கிற கேள்வியை முன்வைத்தார் விஜய் சேதுபதி. அப்போது, "லீடர்னா என்னன்னே தெரியாம, லீடர்ஷிப்னா என்னன்னு தெரியாம, வாய்க்கு வந்தமாதிரி வாக்குறுதிகளை அள்ளி விட்டுட்டு, பிரச்சனைகளும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல பழியை தூக்கிப்போட்டு, அங்க இருந்து தெறிச்சு ஓடுறதுங்கிறது லீடருக்கான குவாலிட்டி இல்ல. அது ஏமாத்து வேலை' என்றார் விஜய் சேதுபதி. பிக்பாஸ் வீட்டின் கேப்டனை நோக்கி விஜய் சேதுபதி கூறிய கருத்துகள், தற்போதைய அரசியல் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதால் இந்தப் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. அதுவும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை குறிவைத்து கலாய்த்தாரா விஜய் சேதுபதி? என்பதுதான் சமூக வலைத்தளங்களில் முதன்மையான டிரண்டிங்காக இருக்கிறது.''’
பா.ம.க.வை வளைக்கும் கட்சிகள்!
"இடைத் தேர் தலில் பா.ம.க.வை வளைத்து தம் பக்கம் கொண்டு வர தி.மு.க., அ.தி.மு.க. கட்சி கள் சீக்ரெட்டாக முயற்சி செய் கிறதாமே?''”
"கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அடங்கிய என்.டி.ஏ. கூட்டணியில் அங்கம்வகித்தது பா.ம.க. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அ.தி.மு.க.வுடனான உறவை பா.ம.க. துண்டித்துக் கொண்டது. சட்டமன்றத் தேர்தலில் வடதமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற்றதற்கு பா.ம.க. வின் செல்வாக்கும் முக்கிய காரணமாகப் பார்க்கப் பட்டது. அந்தவகையில், மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூகமும் பட்டியலினமும்தான் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்திகள். இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியிலிருந்த வி.சி.க., தற்போது த.வெ.க. கூட்டணியிலிருப்பதால் பா.ம.க.வின் ஆதரவைப் பெற தி.மு.க. தலைமை விரும்புகிறது. அதேபோல, கடந்த முறை மதுராந்தகத்தில் அ.தி.மு.க. வெற்றிபெற பா.ம.க.வின் செல்வாக்குதான் உதவியது. அதனால், பா.ம.க ஆதரவைப் பெற அ.தி.மு.க. தலைமையும் விரும்புகிறது. இதனடிப்படையில் இரு கட்சிகளின் சோர்ஸ்கள், பா.ம.க. தலைவர் அன்புமணியை அணுகியுள்ளனராம்.''”
இடைத்தேர்தல் பட்ஜெட்!
"மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தீவிரம் காட்டிவரும் நிலையில், த.வெ.க. வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க தேர்தல் பட்ஜெட்டில் மும்முரமாயிருக்குதாமே?''”
"த.வெ.க. வேட்பாளர்களை வெற்றிபெறவைக்க அமைச்சர்கள் பலரையும் கண்காணிப்பாளர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் நியமித்திருக்கிறார் விஜய். இதற்கான பட்டியலை ஆலோசகர்கள்தான் தயாரித்துள்ளனர். இந்த பட்டியல், லண்டனிலிருக்கும் விஜய்க்கு அனுப்பிவைக்கப்பட, அதனைப் பாராமலே ஓகே சொல்லிவிட்டாராம் விஜய். இந்நிலையில், ஒவ்வொரு பூத்துக்கும் ஒவ்வொரு 1000 ஓட்டுக்கும் ஒரு குழு அமைத்து தேர்தல் பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல்போல காசு கொடுக்காமல் ஓட்டுகளை வாங்கமுடியாது; பணம் கொடுத்தால் மட்டுமே காரியம் நடக்கும் என்று தெரியவந்திருப்பதால் இரு தொகுதிகளுக்குமான பட்ஜெட்டை போடத் தொடங்கியுள்ளனர் ஆலோசகர்கள். ஒரு தொகுதிக்கு 100 கோடி என 200 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம். த.வெ.க.வின் இந்த பட்ஜெட் வியூகத்தைக் கண்காணித்து முறியடிப்பதில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை மும்முரம் காட்டிவருகின்றன.''”
லண்டன் பயண சர்ச்சை!
"த.வெ.க. தலைவர் விஜய்யின் லண்டன் பயணத்தில் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளதே?''”
"த.வெ.க. தலைவர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்னையிலிருந்து செப்டம்பர் 10-ஆம் தேதி கிளம்புகிறார். செப்டம்பர் 17-ஆம் தேதி திரும்புகிறார் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரிதாக மற்ற எந்த விவரங்களும் இல்லை.
தொழில் முதலீட்டுக்கு போகக்கூடிய முதலமைச்சர், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தொழில்துறை செயலாளர் யாரையும் அழைத்துச்செல்லவில்லை. ஆனால் தன்னுடன் விஷ்ணுரெட்டியை அழைத்துச் சென்றிருக்கிறார். யார் இந்த விஷ்ணு ரெட்டி? இவருக்கு அதிகாரப்பூர்வமாக என்ன பதவி கொடுக்கப்பட்டுள்ளது? இவரை விமான நிலையத்தின் வி.வி.ஐ.பி. நுழைவாயிலில் உள்ளே அனுமதிக்காததால், இவருக்காக புரோட்டாகாலை மீறி மக்கள் நுழைவாயிலின் வழியே சென்றார் விஜய். அதனை எளிமை என அவரது கட்சியினர் குறிப்பிட்டாலும், விஷ்ணுரெட்டியில்லாமல் விஜய்யால் எதையும் யோசிக்க முடியாது. அந்தளவுக்கு அவரது பிடியில் இருக்கிறார். அதனால்தான், கூடவே அவரும் மக்கள் நுழைவாயிலின் வழி வந்தார் என்கிறார்கள். லண்டனிலும் அஜீத்தின் கார் ரேஸ் நிகழ்வில் கேலரியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு அருகே நடிகை த்ரிஷாவின் முகம் தெரிய, அவசரமாக தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டார். இது ஒருபுறமிருக்க, ஹூண்டாய் நிறுவனம் 38,000 கோடி கப்பல் தள கட்டுமான முதலீட்டை, கடந்த அரசு தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தது. சமீபத்தில் மிகப்பெரிய திட்டமான இதனைக் கவர நிலம், சலுகைகள் என ஆந்திர அரசு தென்கொரியாவுக்கே சென்று ஹூண்டாய்க்கு கொக்கி போட்டிருக்கிறது. அதனால் இப்பொழுது அந்த ப்ராஜெக்ட் காக்கிநாடாவுக்கு போகப்போகிறது என்று தி எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. விஜய் லண்டனுக்கு முதலீட்டை ஈர்க்கப் போகும் நேரத்தில், ஏற்கெனவே உறுதியான முதலீடு, ஆந்திரா பக்கம் போகப் போவதாக செய்திகள் வர, வந்த முதலீட்டையாவது கோட்டைவிடாமல் காப்பாத்துங்க என விமர்சனக் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.''’
சண்முகத்தின் திட்டம்!
"அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம், வன்னியர் தலைவராக உருவெடுக்கத் திட்டம்போட்டுள் ளாராமே?''”
"ஆமாம் தலைவரே, அப்படி ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால், அது எந்தளவுக்கு செல்லுபடி யாகும் என்கிற சந்தேகமும் அவருக்கு இருக்கிறது. வன்னியர் சமூகத்தின் ஆகப்பெரிய தலைவராக இருந்த எஸ்.எஸ்.இராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளில் (வருகிற செப்டம்பர் 16-ஆம் தேதி) அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் சி.வி.சண்முகம். இதனை பரபரப்பாக்கவும் இருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இதற்கிடையே, ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு நடத்திவருவதால் த.வெ.க. அரசு சார்பில் யாரை அனுப்பி ராமசாமி படையாச்சியாருக்கு மரியாதை செலுத்தவைப்பது என விஜய்க்கு தகவல் அனுப்பியுள்ளனர் அதிகாரிகள்.''’
பஞ்சாயத்து!
"விஜய்யின் நண்பரும் மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்தின் உறவினர் ஸ்ரீதர் மீது ஏகப்பட்ட வில்லங்கப் புகார்கள் கிளம்பி யிருக்காமே?''”
"அமைச்சர் ஸ்ரீநாத், தொகுதிப் பக்கமே எட்டிக்கூட பார்ப்பதில்லை. கோப்புகளை சரிவரப் பார்ப்பதில்லை. இதனால், துறையின் டெண்டர் விவகாரங்கள், இடமாறுதல்கள் தொடங்கி கட்சிப் பதவிகள் வரை தனது உறவினரான ஸ்ரீதரிடம் கவனிக்கச்சொல்லிவிட்டார் அமைச்சர் ஸ்ரீநாத் என்கிறார்கள் த.வெ.க.வினரே. இதனைப் பயன்படுத்தி, ஸ்ரீதர் புகுந்துவிளையாடுகிறார். அமைச்சர் பெயரைச் சொல்லி அதிகாரிகளிடமும் காண்ட்ராக்டர்களிடமும் ஸ்ரீதர் காட்டும் அதிகாரம் எல்லை மீறிப்போகிறதாம். இதனால் துறையின் அதிகாரிகள் நொந்துபோகிறார்கள். இதுகுறித்து, உயரதிகாரிகளிடம் புகார்கள் பறந்துள்ள நிலையில், லண்டனிலிருந்து விஜய் திரும்பியதும் ஸ்ரீநாத், ஸ்ரீதர் குறித்த பஞ்சாயத்து வெடிக்கும் என்கிறார்கள்.''’
வெளியேறியது ஏன்?
"நல்லிணக்க உறவை தி.மு.க. தொடராத தால்தான் அந்தக் கூட்டணியிலிருந்து வி.சி.க. வெளியேறியதாக திருமாவளவன் தெரிவித்துள் ளாரே?''”
"வி.சி.க. தலைமை நிலையச் செயலாளர் தமிழ்ச்செல்வன் இல்லத் திருமண விழா தருமபுரி யில் செப்டம்பர் 13-ஆம் தேதி நடந்தது. இதில் திருமாவளவன் "கூட்டணி மாறிவிட்டோம் என்பதுபோல இன்று நமக்கு துரோகி பட்டம் கட்டி வன்மத்தைப் பரப்புகிறார்கள். வி.சி.க. இயக்கத்திலிருந்த ஆதவ் அர்ஜுனா, ‘2026 சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக உங்களை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் மேற் கொள்ளலாம்’ எனத் தெரிவித்தார். அந்த முடிவை நான் ஏற்றிருந்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி வலுவடைந்திருக்கும். அன்று தி.மு.க. கூட்டணி உடைந்துவிடக்கூடாது என்பதால் அதற்கு இடம்தரவில்லை. கூட்டணிக் கட்சிகளிடையே நல்லிணக்கம், நல்லுறவை பேணிப் பாதுகாக்கும் பொறுப்பு கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிக்குத்தான் உள்ளது. தி.மு.க.வின் இறுக்கமான அணுகுமுறை பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை. தி.மு.க. தான் எங்களை கைவிட்டு விட்டது, நாங்களாக தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளி யேறவில்லை. தேர்தல் வெற்றி, தோல்விகளைவிட நல்லிணக்க உறவு முக்கியம்'’எனப் பேசியிருப்பது கவனம் பெற் றுள்ளது.''
கோவை என்கவுண்டர்!
"கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைசெய்த வழக்கில் காவல் துறைக்கும் குற்றவாளி களுக்குமிடையே என்கவுண்டர் நடைபெற்றுள்ளதே?''
"ஆமாம் தலைவரே. கோவை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயதுச் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செப். 12-ஆம் தேதி இரவு சிறுமி தொடர்பாக கிடைத்த புகாரினடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் (தெற்கு) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் சந்தோஷ், தவசி ஆகிய இருவரும் சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்று, கஞ்சிக் கோணாம்பாளையம் பகுதியிலுள்ள வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டறிந் துள்ளனர். இருவரையும் போலீசார் கைதுசெய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை தவசி மறைத்துவைத்திருந்த இடத்திற்கு, அதைக் கைப்பற்றுவதற்காக காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அவரை அழைத்துச்சென்றனர். மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை திடீரெனத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து நடந்த என்கவுண்டரில் தவசியின் இடது காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டது.''”
விஜய்யின் கைராசி!
"விஜய்யின் கைராசி லண்டனில் நல்லா ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறதாமே...?''
"லண்டன் கார் பந்தயத்துல 44 கார்கள் பங்கேற்ற நிலையில், அஜித்குமார் தலைமையிலான ரெட் அண்ட் பை விராஜ் அணி 38ஆவது இடத்தைப் பிடித்தது. முதல்வர் விஜய் தொடங்கி வைத்ததால்தான் இந்த தோல்வி என்று விமர்சனம் கிளம்பியுள்ளது.''
புறக்கணிப்பு?
"திண்டுக்கல் மாவட்டத்தில் த.வெ.க. வென்ற ஒரே தொகுதியான நிலக்கோட்டையில், பட்டியலின எம்.எல்.ஏ.வான அய்யனார் புறக்கணிக்கப்பட்டதா பேச்சுக் கிளம்பியிருக்கே?''”
"திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வத்தலக் குண்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் சுமார் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சரு மான விக்னேஷ் தாமதமாக மதியம் இரண்டு மணிக்கு மேல்தான் வந்தார். நிலக் கோட்டை (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் த.வெ.க.வால் அறிவிக்கப் பட்ட புதிய மாவட்டச் செயலாளருமான அய்யனா ருக்கு அமைச்சரோ, மாவட்ட ஆட்சியரோ தகவல் தெரிவிக்காததால் கலந்துகொள்ளவில்லை. எம்.எல்.ஏ. அவரது தொகுதியிலே புறக்கணிக்கப்பட்ட சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மாவட்டச் செயலாளர்களும் அய்யனாரை புறக்கணித்ததை யடுத்தே அவரை தென்மேற்கு மாவட்டச் செயலாளராக அறிவித்திருந்தனர். விஷயம் விவ காரமாகும் என்ற நிலையில், கடைசி நேரத்தில் அழைத்து அவரை பெயரளவில் கலந்துகொள்ளச் செய்திருக்கின்றனர். த.வெ.க. வென்ற ஒரே தொகுதியான நிலக்கோட்டையில், பட்டியலின எம்.எல்.ஏ. என்பதாலேயே மாவட்ட ஆட்சியர் முதல் பொறுப்பு அமைச்சர் வரை தொடர்ந்து புறக்கணிப்பது பேசுபொருளாகியுள்ளது.’
அமைச்சரின் கில்லாடி அப்பா!
"அமைச்சர் கீர்த்தனாவோட அப்பா, வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டதா செய்தி காதில் விழுதே?''
"விருதுநகரைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் ‘2018-ல் 2 பைசா வட்டிக்கு ரூ.50,000 கடன் வாங்கி னார் சம்பத். இவர் அமைச்சர் கீர்த்தனாவின் அப்பா. கையெழுத்திட்டு கொடுத்த ப்ரோநோட் என்னிடமிருக்கிறது. இன்றுவரை அந்தப் பணத் தைத் திருப்பித்தரவில்லை. அசல் பணத்தையாவது தந்தால் போதும் என்று கேட்டேன். அதையும் தரவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவரைத் தற்செயலாக நேரில் சந்தித்தேன். கடன் குறித்து கேட்டேன். சென்னைக்கு அவசரமாக பிளைட்டில் கிளம்பவேண்டும்’ என்று சொல்லிவிட்டு எஸ்கேப் பாகிவிட்டார். பலரையும் பண விஷயத்தில் அவர் ஏமாற்றியிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக் கிறேன். மகள் அமைச்சராக இருப்பதால், காவல்துறையிடம் புகாரளித்தாலும் சரிவராது என்றுதான் நக்கீரனிடம் தெரிவிக்கிறேன்’ என்று நமது செய்தியாளரைத் தொடர்புகொண்டி ருக்கிறார். நக்கீரன் தரப்பில் அமைச்சரின் அப்பாவைத் தொடர்புகொண்டபோது, ‘"ராஜாவா அப்படி சொன் னார்? அவரால் எனக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம். இதை நான் யாரிடம் போய் சொல்வது? மகள் தான் அமைச்சராகிவிட் டாரே... பணம் கேள், தருவார் என்று யாராவது அவரைத் தூண்டிவிட்டிருப்பார்கள்'’என்கிறார். எந்தத் தரப்பு சொல்வது உண்மையோ?''”
கேரளாவில் த.வெ.க. அலுவலகம்!
"நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தைத் தாண்டி கேரளாவிலும் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறதே?''
"ஆமாம்... இதன் ஒருபகுதியாக, பாலக்காடு மாவட்டம் சித்தலஞ்சேரி கடம்படி பகுதியில் கேரள மாநிலத்தின் முதல் த.வெ.க. அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. த.வெ.க. மாவட்டச் செயலாளர் காஜா ஹுசைன், கட்சியின் புதிய அலுவலகத்தை திறந்துவைத்தார்.'' ’
"சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க. இந்தியாவில் மிக மோசமான தனிநபர் வருமானம் உள்ள மாநிலங்களில் ஒன்று பீகார். இதன் தனிநபர் வருமானம், ஆப்பிரிக்காவின் வறுமையான நாடுகளில் ஒன்றான சோமாலியா வுக்கு நெருக்கமாக உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால் அதே பீகாரில் இந்தியப் பிரதமர் மோடிக்கு பாட்னாவில் விரைவில் கோவில் கட்டப்போவதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 112 கோடி செலவில் கட்டப்படவுள்ளதாக சொல்லப்படும் அக்கோவிலுக்கு பீகார் அரசு நிலம் தர முன்வந்துள் ளது. மக்கள் உணவுக்கே கஷ்டப்படவும், பிற மாநி லங்களுக்குச் பிழைப்புத் தேடி ஓடும் நிலையிலும் இருக்கையில் மோடி பெயரில் கோவில் கட்ட 110 கோடி செலவிடுவது சரியா என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக் கின்றனர்.''
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)