திராவிட அரசியலில்எம்.ஜி.ஆர். எழுச்சி! டைரக்டர் -ரைட்டர் -வி.சி.குகநாதன் (26)

(26) கதை தேர்வில் எம்.ஜி.ஆர். எக்ஸ்பர்ட்!
1979ஆம் ஆண்டு இலங்கை அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ராஜதுரை, கதிர்காமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் துணை அமைச்சராக இருந்த ஐசரிவேலனையும், என்னையும் அழைத்திருந்தார். பத்தொன்பது ஆண்டுகள் என் தாய், தந்தையரைப் பார்க் காமல், திரையுலகில் பலமொழிப் படங்களில் ஓய்வில்லாமல் பணியாற்றிக்கொண்டிருந்த எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. எங்களுக்கு கொழும்பு விமானநிலையத்தில் நல்ல வரவேற் பளிக்கப்பட்டது. அமைச்சரே நேரில் வந்திருந்தார். அன்று மாலையே ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பலரின் அறிமுகம் கிடைத்திருந்தாலும், இலங்கை நயினார் சந்திப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் இலங்கை எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தின் பொரப்பாளராக இருந்தார். ரசிக மன்றம் சார்பாக பல நல்ல திட்டங்களைச் செய்துவந்தார். அதனால் எம்.ஜி.ஆரின் பாசத்திற்குரியவராகவும் இருந்தார். பிற்காலத்தில் நயினார், சென்னை வந்தால் என் அலுவலகத்தில் தங்கு வார். என் படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடிக்கவும் செய்தார். எமது நட்பு நீண்ட காலம் நீடித்தது. இது எம்.ஜி.ஆருக்கும் தெரியும்.
இலங்கை யில் எம்.ஜி. ஆருக்கு ஏராளமான ரசிகர்களிருக்கிறார்கள். அவரின் படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனைகள் படைத்திருக்கின்றன. 1917ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவரான எம்.ஜி.ஆர்., 1966ஆம் ஆண்டு ஒரு பத்திரிகை நிறுவனத்தின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றார். அவரை வரவேற்க கொழும்பு விமான நிலையத்தில் மக்கள் கடல் நாலாபுறமும் கூடி நின்றதைப் பார்த்தவர்கள், இப்படியொரு கூட்டத்தை இதுவரை நாம் கண்டதில்லை என வியந்தனர். எட்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்த எம்.ஜி.ஆர். கண்டி, நுவெரேலியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மாத்தளை என அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
எனக்குத் தெரிந்து இரண்டு நடிகர்கள் தாங் கள் நடிக்கும் படங்களுக்கான கதையை தேர்வு செய் வதில் மிகவும் வல்லவர்கள். ஒருவர் நம் மக்கள் தில கம், அடுத்தவர் தெலுங்கு நாயகர் நாகேஸ்வர ராவ்.
நான் எழுத ஆரம்பித்த காலங்களில் இதை உற்றுக் கவனித்திருக்கின்றேன். எம்.ஜி.ஆர். தன் சொந்த கம்பெனியாக எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் மூன்று படங்களை தயாரித்துள்ளார். "நாடோடி மன்னன்', "அடிமைப் பெண்', "உலகம் சுற்றும் வாலிபன்'. மூன்றும் மூன்று விதமான கதைகள். மூன்றிலுமே சாதனை படைத்த பாடல்கள்.
வசூலில் சரித்திரம் படைத்த படங்கள். எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத படங்கள். அப்படியானால் அவர் எவ்வளவு சிரமப்பட்டு உழைத்திருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவர் தான் நடிக்கும் படங்களுக்கான கதையை தேர்வு செய்யும்போது இந்தக் கதையை ஒற்றை வரியில் சொல்லி, அடுத்தவர்களை அசத்திவிட முடியுமா எனப் பார்ப்பார். என் ரசிகர்கள் இதை விரும்பி திரும்பத் திரும்ப பார்க்க என்ன இருக்கிறது? இதுபோன்ற கதை முன்னர் வந்திருக்கிறதா? வில்லன்களுக்கு வலுவான மோட்டிவேசன் இருக்கிறதா? கதையில் உணர்ச்சி, விறுவிறுப்பு இருக்கிறதா? இடைவேளைக்குப் பின்னால் நல்ல திருப்பங்களும், புதுமையான திரைக்கதைக்கான வாய்ப்பும் இருக்கிறதா? வழக்கத் துக்கு மாறான சண்டைக் காட்சிகளை அமைக்க ஏதுவான கதையா? காதல் காட்சிகள், பாடல் காட்சிகள், அறிவுரைப் பாடல் ஆகியவை அமைய வாய்ப்புள்ள கதையா? படம் முடிந்து ரசிகர்கள் வெளியே வந்த பின்னரும் இந்தக் கதையை பாராட் டவோ, விவாதிக்கவோ வாய்ப்பு இருக்கிறதா? இப்படி பல விஷயங்களை சிந்தித்துப் பார்த்துதான் கதையை முடிவுசெய்வார். அவரது படங்கள் பெறும் வியாபாரரீதியான வெற்றிக்கு இதுதான் காரணம்.
எம்.ஜி.ஆர். படங்களின் எல்லா கதைகளும் ஒரே மாதிரிதான் இருக்கும் எனச் சொல்பவர்களே அதிகம். அப்படியிருந்தால் மக்கள் ஏன் அவர் படங்களை திரும்பத் திரும்ப பார்க்கப் போகி றார்கள்? இத்தனைக்கும் அவர் படங்களில் நம்பியார், அசோகன், நாகேஷ், சோ, வி.கே.ஆர்., சரோஜாதேவி, பானுமதி, அஞ்சலிதேவி, ஜெயலலிதா, லதா, மஞ்சுளா -இவர்கள்தான் திரும்பத் திரும்ப நடிக்கிறார்கள். ஆனாலும் படங்கள் வெற்றியடைகின்றன. ஏன்? எம்.ஜி.ஆர். மக்களின் ரசனையை தெளிவாகப் புரிந்தவர். அவரிடம் இன்னு மொரு குணமுண்டு. சில இயக்குநர்களிடம் எதுவும் கேட்கமாட்டார், தலை யிடவும் மாட்டார். அவர் கள் சொல்வதை செய்து விட்டு வந்துவிடுவார். அப்படி அவர் நடித்த படங்கள் "எங்க வீட்டுப் பிள்ளை', "உரிமைக் குரல்', "நம்நாடு', "மீனவ நண்பன்' போன்ற சில படங்கள். அப்ப டிப்பட்ட படங்கள் வெற்றிப் படங்களாயின.
1966ஆம் ஆண்டு தியாகராய நகர் கோவிந்து தெருவில் ஜேயார் மூவீஸ் அலுவலகம் இருந்தது. என்னை முதன்முதலில் அங்கே அழைத்துப் போன வர் டி.என்.பாலு. அதே கம்பெனிக்குத்தான் எம்.ஜி.ஆர். என்னை அனுப்பப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது. இயக்குநர் சாணக்யாவிடம் என்னை சேர்த்துவிட்டு, "உங்க கூட இருந்து முதல்ல தொழிலைக் கற்றுக்கொள்ளட்டும்' எனச் சொன்னார் எம்.ஜி.ஆர். அந்த இயக்குநர் என்மீது அளவற்ற பாசத்தைக் காட்டினார். திலீப்குமார் நடித்த இந்தி "எங்க வீட்டு பிள்ளை' (தஹம் ஆன்ழ் நட்ஹ்ஹம்) படத்தில் அப்ரண்டிஸாக வேலை பழக வைத்தார். பம்பாய் போகும்போதெல்லாம் என்னையும் அழைத்துப் போவார். ஜேயார் மூவீஸில் பிற எழுத்தாளர்களிடம் கதை கேட்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் சாணக்யா ஸார். அதேபோல் இந்தி கம்பெனி ஒன்றுக்கு என்னிடம் கதை வாங்க வைத்தார். அரகுஜா என்ற அந்த தயாரிப்பாளர் ஜிதேந்திரா, பபிதா, ராஜ்குமார் போன்ற பிரபல நடிக, நடிகையரை வைத்து "பிக்ரே மோதி' என்ற பெயரில் என் கதையை எடுத்தார். அதேபோல் எம்.ஜி.ஆர்., ஏவி.எம். கதை இலாகாவில் சேர ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.
எம்.ஜி.ஆர். என்மீது காட்டிய அக்கறைக்கு அளவே கிடையாது. அவர் மூலமாக எனக்கு பல பெரியவர்களின் அறிமுகம் கிடைத்தது. எந்தக் காலத்திலும் அவர் எனக்கு தடைகள் விதித்தது இல்லை. எனக்கு அரசியல் வேண்டாம் என்று முடிவாக அவரிடம் சொல்லிவிட்டதனால் சினிமாவில் நான் வளர்ந்து நிலையான ஒரு இடத்தைப் பிடிக்கவேண்டும் என விரும்பினார்.
எம்.ஜி.ஆர். படங்களில் வேலை செய்யும்போதே சிவாஜி ஸார் படங்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தன. அவரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றவில்லை. ஒருசில பத்திரிகை ஆசிரியர்கள் இதை ஒரு குற்றமாக எம்.ஜி.ஆரிடம் கோள் சொன்னார்கள். அப்படியா என்று கேட்டுக்கொண்டாரே தவிர என்னிடம் எதுவும் கேட்கவில்லை. இது கோள் சொன்ன பத்திரிகை ஆட்களுக்கு வியப்பாக இருந்தது. நான் சிறு, சிறு தவறுகள் செய்தால் கூட கண்டித்ததே கிடையாது. "அவன் அது தப்புன்னு தெரிஞ்சா செய்யமாட்டான்' என என்னை முழுமையாக நம்பினார்.
எம்.ஜி.ஆரை நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு, நம்பி கெட்டவர்கள் யாருமில்லை. அதில் நானும் ஒருவன். அந்த நன்றியுணர்வை தெரிவிக்கும் நோக்கத்துடன்தான் "மாங்குடி மைனர்' படமும், "அண்ணா நீங்க நெனைச்சபடி நடந்திருக்கு, புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு' என்ற பாடலும். அடுத்து "எம்.ஜி.ஆர். இல்லம்' என்ற படத்தை எடுக்க முயற்சி செய்தேன். ஏழு பாடல்களை பதிவு செய்து ராஜ்கிரணை ஒப்பந்தம் செய்து பூஜையும் போட்டேன். ஆட்சி மாற்றங்கள் என் பணியை முடக் கியது. ஆனால் எம்.ஜி.ஆர். என்ற அண்ணாவின் இதயக்கனி, ஈழத்தமிழர்களின் காவல் தெய்வம், தாய்க்குலத்தின் தவப்புதல் வன் நேற்றல்ல, இன்றல்ல... நாளையும் போற்றி கொண்டாடப் பட வேண்டியவரே! ஆதலினால் அவரைக் கொண்டாடும் ஒரு நல்ல உள்ளம் எனக்கு உதவ முன்வந்தால் "எம்.ஜி.ஆர். இல்லம்' தொடர்ந்து அவர் புகழ்பாடும் படமாக வந்தே தீரும்!
(வரும் இதழில்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)