Arts, culture, entertainment and media
அரை ஏக்கர்... 90 மரங்கள்... ஆண்டுக்கு ரூ.2 லட்சம் லாபம்!
“அரை ஏக்கர் பரப்பில் 90 மா மரங்கள் இருக்கு. அதில் 20-30 மரங்கள்தான் காய்க்க ஆரம்பிச்சிருக்கு. அது மூலமாவும் ஒரு கணிசமான வருமானம் கிடைக்குது. எள், நிலக்கடலைச் சாகுபடி செய்றோம்.

இயற்கை கொய்யா கொடுக்கும் இனிப்பான மகசூல்!
``ஓய்வுக்காலம் என்பது, நாங்கள் பல ஆண்டுகளாகப் பார்த்து வந்த அரசுப் பணியிலிருந்து ஓய்வெடுப்பதுதானே தவிர, எங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுப்பதல்ல. இந்தக் காலகட்டம், மண்ணோடு இணைந்து, இயற்கை விவசாயத்தின் மூலம் புதியதொரு வாழ்வை தொடங்கு வதற்கான பொன்னான வாய்ப்பு’’ என நெகிழ்ச்சியோடு சொல்கிறார்கள், திருச்சியைச் சேர்ந்த தங்கம் அம்புரோஸ் - லில்லி கிறிஸ்டி தம்பதி.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலிருந்து விராலிமலை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலம்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து ஓய்வுக்காலத்தை உன்னதமாக மாற்றியிருக்கிறார்கள், இந்தத் தம்பதி. ஒரு காலைப் பொழுதில் தோட்டத்தில் அவர்களைச் சந்தித்தோம். ``நாங்கள் பசுமை விகடனின் நீண்டகால வாசகர்கள்’’ என்று சொல்லி மகிழ்ச்சியோடு வரவேற்று தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்கள்.
``நான் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் சிவில் இன்ஜினீயரா வேலை பார்த்து 2017-ம் வருஷம் ரிட்டையர்டு ஆனேன். என் மனைவி லில்லி கிறிஸ்டி, அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியரா இருந்து 2016-ம் வருஷம் ரிட்டையர்டு ஆனாங்க. எங்களுக்கு இரண்டு மகள்கள். இரண்டு பேரையும் திருமணம் செய்து கொடுத்திட்டோம். விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் எங்க ரெண்டு பேருக்குமே ஆர்வம் அதிகம். ரிட்டையர்டு ஆனப்போ கிடைத்த பணத்தை பேங்கில் டெபாசிட் பண்ணிட்டு கிடைக்கிற வட்டியை எடுத்து சாப்பிடுறதில எங்களுக்கு உடன்பாடில்லை. சொந்தமா நிலம் வாங்கி, இயற்கை விவசாயம் செஞ்சோம்னா, நமக்கு மட்டுமில்லாமல், இன்னும் நாலு பேருக்கு பிரயோஜனமா இருக்குமேனு நினைச்சோம்.
அன்று காடு... இன்று சோலை!
எங்க குடும்ப நண்பர் ஒருத்தர், ஏற்கெனவே இந்த பகுதியில் விவசாயம் செஞ்சுட்டிருந்தார். அவரோட தோட்டத்தைப் பார்த்ததும் எங்களுக்கு ஆசை அதிகமாச்சு. 2021-ம் வருஷம், இந்த மூன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினோம். வாங்கும்போது நிறைய மரம், செடி, கொடிகள் மண்டி காடு மாதிரி கிடந்துச்சு. மேடு, பள்ளங்களும் அதிகமா இருந்துச்சு. நிலத்தைச் சுத்தப்படுத்தி, மண்ணைச் சமப்படுத்துறதுக்கே பல வாரங்களாச்சு. நிலத்தைத் தயார் செய்த பிறகு, கம்பி வேலி போட்டோம். இங்கே ஏற்கெனவே நிறைய தைலமரம் இருந்ததால, மண்ணில் காரத்தன்மை அதிகமா இருந்துச்சு. அதைக் கட்டுப்படுத்த நிலம் முழுக்க பரவலா, சுண்ணாம்பைத் தூவி, உழவு செஞ்சோம். அதுக்குப் பிறகு, ஒரு மழை பெய்ததும் இன்னொரு முறை சுண்ணாம்பு தூவி உழவு செஞ்சோம்.
நான்கு பகுதிகளாகப் பிரித்து விவசாயம்!
பிறகு நிலத்தை நான்கு பகுதிகளாகப் பிரிச்சு விவசாயத்தை ஆரம்பிச்சோம். அரை ஏக்கர் பரப்பில் தைவான் பிங்க், லக்னோ-49 ரகங்களில் 90 கொய்யா மரங்கள் இருக்கு. அடுத்த அரை ஏக்கர் பரப்பில் இமாம் பசந்த், பங்கனபள்ளி, மல்லிகா, செந்தூரா ரகங்களில் 90 மா மரங்கள் இருக்கு. ஒன்றரை ஏக்கர் பரப்பில் 300 தேக்கு மரங்களை நடவு செஞ்சிருக் கோம். ஒரு ஏக்கர் பரப்பில், நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களை மாத்தி மாத்திச் சாகுபடி செய்றோம். இங்கேயே பண்ணை வீடு இருக்கு. வீட்டைச் சுற்றிலும் வாழை, பப்பாளி, நாட்டு நாவல், செம்மரம், வாட்டர் ஆப்பிள் மரங்கள் இருக்கு.
சொட்டுநீர் மூலம் சீரான பாசனம்!
பாசனத்துக்காக 320 அடி ஆழத்தில் போர்வெல் போட்டிருக்கோம். தண்ணீரைச் சிக்கனமா பயன்படுத்துறதுக்காக மூன்றரை ஏக்கர் பரப்புக்கும் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சுட்டோம். அதனால், எல்லா பயிர்களுக்கும் சீரான முறையில் தண்ணீர் கிடைக்குது. இயற்கை விவசாயம், நீர் மேலாண்மை பத்தின எந்த சந்தேகமா இருந்தாலும், வேளாண் பொறியாளரும், இயற்கை விவசாய வல்லுநருமான பிரிட்டோ ராஜ் சார்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குவோம்’’ என்ற தங்கம் அம்புரோஸைத் தொடர்ந்து அவரின் மனைவி லில்லி கிறிஸ்டி, கொய்யாச் சாகுபடி குறித்துப் பேச ஆரம்பித்தார்.
15 அடி இடைவெளி!
``நிலத்தில் 15 அடி இடை வெளியில், 3 அடி சதுரம், 3 அடி ஆழத்தில் குழிகள் எடுத்து நல்லா ஒரு வாரம் காயவிட்டு... ஒரு குழிக்கு 250 கிராம் வேப்பம்பிண்ணாக்கு போட்டு, மேல் மண்ணால் குழியை மூடி அதுக்கு மேல், பாஸ்போ பாக்டீரியா, சூடோ மோனஸ், அசோஸ்பைரில்லம் ஒவ்வொண்ணிலும் 25 கிராம் அளவு போட்டோம். அதுக்கப்புறம், 3 மாத வயசில் தைவான் பிங்க் ரகத்தில் 85 கன்றுகளையும், லக்னோ-49 ரகத்தில் 15 கன்றுகளையும் நடவு செஞ்சோம். அதில் 10 கன்றுகள் பட்டுப் போயிடுச்சு. மீதி 90 கன்றுகள் நல்லா வளர்ந்து வந்திருக்கு.
கவாத்து செலவைக் குறைக்கும் `டெக்னிக்'!
நடவு செஞ்ச ஒரு வருஷத் திலேயே பூ எடுத்துச்சு. அதையெல்லாம் கிள்ளி விட்டுட்டோம். அடுத்த பருவத்தில் பூத்த பூக்களையும் கிள்ளி விட்டுட்டு ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு வந்த பூக்களைக் காய்க்க விட்டோம். கொய்யாச் சாகுபடியில் கவாத்து ரொம்ப முக்கியம். அப்போதான் மரங்கள் ரொம்ப வருஷம் காய்க்கும். நாங்க காய்களை அறுவடை செய்யும்போதே, அரை அடி முதல் 1 அடி நீளத்துக்குக் காம்போடு சேர்த்து காய்களைப் பறிப்போம். அதனால், பறிச்ச இடத்தில், சீக்கிரத்தில் துளிர்கள் உருவாகி உடனே பூவும் பிஞ்சும் வந்துடுது. கவாத்துக்குனு தனியா நேரமும் பணமும் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுறதில்ல. அதிக எண்ணிக்கையில் பூக்கள் உருவாகி, கூடுதல் மகசூலும் கிடைக்குது. ஒவ்வொரு வருஷமும் ஜனவரி மாசத்தில ஒரு மரத்துக்கு 15-20 கிலோ தொழு உரமும் 3-5 கிலோ மண்புழு உரமும் வைக்கிறோம். மண்புழு உரத்தை வெளியில்தான் வாங்குறோம்.
நடவு செஞ்சதிலிருந்தே 15-20 நாள்களுக்கு ஒரு முறை இலைவழி ஊட்டமா, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மீன் அமினோ அமிலம்னு கலந்து தெளிக்கிறோம். சந்தையில் விலை மலிவா கிடைக்கிற மீன் கழிவுகள், கனிஞ்ச வாழைப்பழங்கள், கழிவு வெல்லம் எல்லாத்தையும் வாங்கி நாங்களே மீன் அமினோ அமிலம் தயாரிக்கிறோம்.
இ.எம் தாய்த்திரவம் ஒரு லிட்டரில் 17 லிட்டர் தண்ணீர், 2 கிலோ நாட்டுச்சர்க்கரை சேர்த்து இ.எம் கரைசல் தயார் செய்றோம். அதில் 2 லிட்டர் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் மாதா மாதம் வேர் வழி ஊட்டமா கொடுக்கிறோம்.
சுவையைக் கூட்டும் சாம்பல்!
அப்பப்போ களைகளை எடுத்திடு வோம். அதனால், தேயிலை கொசுக்கள் கட்டுப்படுது. பொட்டாஷ் சத்துக்காக மரங்களின் தூர்ப் பகுதியில் அடுப்புச் சாம்பல் போடுவோம். அதனால், பழங்களின் சுவை அதிகரிக்கும். ஒரு உணவகத் திலிருந்து சாம்பலை வாங்கிக்கிறோம். மாதம் ஒரு முறை... 50 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ கடலைப் பிண்ணாக்கை 5 நாள் ஊறவெச்சு அந்தக் கரைசலில் 45 லிட்டர் தண்ணீர் சேர்த்து மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றுவோம். அதே மாதிரி மாதம் ஒரு முறை 100 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் சூடோமோனஸ் கலந்து, அந்தக்கரைசலில் ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் ஊற்றுவோம். இதனால், வேர் அழுகல், இலை அழுகல் பாதிப்புகள் வராது.
கொய்யா, வேம்பு, எருக்கு, புங்கன், நொச்சி ஆகிய இலைகள் ஒவ்வொண்ணிலும் அரை கிலோ எடுத்து, 6 லிட்டர் கோமியத்தில் 15 நாள்கள் ஊறவெச்சு அதில் 150 லிட்டர் தண்ணீர் கலந்து வெச்சுடுவோம். இந்த ஐந்திலை கரைசலில் 300 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மரங்கள் மேல தெளிச்சால் பூச்சிகள் வராது’’ என்றார், லில்லி கிறிஸ்டி.
இயற்கை முறையில் கூடுதல் சுவை!
நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்ன தங்கம் அம்புரோஸ், ``இயற்கை முறையில் விளைவிக்கிறதால, எங்க தோட்டத்துக் கொய்யாப் பழங்களுக்குத் தனி சுவை இருக்கு. அதனால், மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கு. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை கொய்யாப் பழம் பறிப்போம். புதுக்கோட்டை, மாத்தூர் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருத்தர், தோட்டத்துக்கே வந்து பழங்களை வாங்கிட்டுப் போறார். பழங்கள் அதிகமா கிடைச்சால், திருச்சி, உறையூர் சந்தையில் விற்பனை செய்வோம்.
வருஷத்தில் 8 மாதங்கள் மகசூல் கிடைக்குது. ஒரு மாசத்துக்குச் சராசரியா 900 கிலோ அளவுக்குக் கொய்யா கிடைக்கும். மொத்த விலையில் ஒரு கிலோ 45 ரூபாய்னு விற்பனை செய்யுறோம். மொத்தம் 900 கிலோ பழங்கள் விற்பனை மூலம், 40 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் எல்லா செலவுகளும் போக, 25 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். அந்தக் கணக்கில் ஒரு வருஷத்துக்கு (8 மாதங்கள்) 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சுடும்’’ என்று மகிழ்ச்சியுடன் சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு: தங்கம் அம்புரோஸ் - 99947 63460
வருங்கால வைப்பு நிதி!
“அரை ஏக்கர் பரப்பில் 90 மா மரங்கள் இருக்கு. அதில் 20-30 மரங்கள்தான் காய்க்க ஆரம்பிச்சிருக்கு. அது மூலமாவும் ஒரு கணிசமான வருமானம் கிடைக்குது. எள், நிலக்கடலைச் சாகுபடி செய்றோம். அதை அறுவடை செஞ்சு எண்ணெய் ஆட்டி எடுத்து வெச்சு வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்துறோம். அதேமாதிரி, எங்க வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைச்சு, வீட்டுக்குத் தேவையான எல்லா காய்கறிகளையும் இயற்கை முறையிலே விளைவிச்சுக்கிறோம். மொத்தம் இருக்கிற 300 தேக்கு மரங்கள் செழிப்பா வளர்ந்து வருது. அது வங்கி வைப்பு நிதி மாதிரி, வருங்காலத்தில் வளமான வருமானம் கொடுக்கும்” என்கிறார், லில்லி கிறிஸ்டி.
வருஷத்தில் 8 மாதங்கள் மகசூல் கிடைக்குது. ஒரு மாசத்துக்குச் சராசரியா 900 கிலோ அளவுக்குக் கொய்யா கிடைக்கும். மொத்த விலையில் ஒரு கிலோ 45 ரூபாய்னு விற்பனை செய்றோம். மொத்தம் 900 கிலோ பழங்கள் விற்பனை மூலம், 40 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில் எல்லா செலவுகளும் போக, 25 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். அந்தக் கணக்கில் ஒரு வருஷத்துக்கு (8 மாதங்கள்) 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைச்சுடும்.
தேயிலைக் கொசுவை விரட்ட கருவாட்டுப் பொறி!
“தோட்டத்துக்குள் களைகள் அதிகம் இருந்தால் தேயிலைக் கொசுத் தாக்குதல் இருக்கும். அதைத் தடுக்க... ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் கழுத்துக்குக் கீழே நான்கு பக்கமும் பென்சில் நுழையும் அளவுக்குத் துளை போட்டு, உள்ளே கருவாட்டுத் தூள் போட்டு அரை பாட்டில் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி மூடி வெச்சிடுவோம். கருவாடு வாசனையால் ஈர்க்கப்படக்கூடிய தேயிலைக் கொசுக்கள், பாட்டில்ல உள்ள துளைகள் வழியா உள்ளே வந்து பாட்டிலிலிருந்து வெளியே போக முடியாமல் செத்துடும். அதேபோல், பறவைகளை விரட்ட ஒரு எவர்சில்வர் பானையைத் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு, அதில் ஒரு இரும்பு ராடைக் கட்டி விடுவோம். காற்றில் அது ஆடும்போது எழும் சத்தத்தால், பறவைகள் ஓடிவிடும்” என்கிறார், தங்கம் அம்புரோஸ்.
