Sport
முதல்வர் கோப்பை வாலிபால் டான் போஸ்கோ முதலிடம்
சென்னை: சென்னை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை வாலிபால் போட்டியில், பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி முதலிடத்தை கைப்பற்றியது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், சென்னை மாவட்ட பள்ளிகள் அளவிலான வாலிபால் போட்டி, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், இரு நாட்கள் நடந்தன.
மாணவர்கள் பிரிவில் 177 அணிகள், மாணவியர் பிரிவில் 67 அணிகள் பங்கேற்றன. மாணவர்கள் பிரிவில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாந்தோம் செயின்ட் பேட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி இரண்டாவது இடத்தையும், கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
மாணவியர் பிரிவில், புரசைவாக்கம் டி.இ.எல்.சி., 'ஏ' அணி சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தை கைப்பற்றியது. அதே பள்ளியின் டி.இ.எல்.சி., 'பி' அணி இரண்டாவது இடம் பிடித்தது. மயிலாப்பூர் லேடி சிவசாமி ஐயர் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடத்தை பெற்றது.