62 லட்சம் பேல் பஞ்சு இறக்குமதி இருப்பினும் உயரும் நுால் விலை: முதல்வருக்கு டீமா அவசர கடிதம்
திருப்பூர்:பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கு அளித்த பின்னரும், செயற்கையாக நுால் விலை உயர்த்தப்படுவதாக, 'டீமா' சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கோவை, திருப்பூர், ஈரோடு கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. நாடு முழுவதும் விற்பனைக்கான பின்னலாடைகளும் உற்பத்தியாகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 90 சதவீதம் இயங்குகின்றன. பல லட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, சில பெரிய நுாற்பாலைகள், செயற்கையான முறையில் பஞ்சை பதுக்கி, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, நுால் விலையை உயர்த்தி வருகின்றன. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது; தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. பருத்தி தேவையை பூர்த்தி செய்ய, இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வரிவிலக்கு அளித்த பின், 62 லட்சம் பேல் வரை இறக்குமதியாகியுள்ளது. இருப்பினும் செயற்கையான முறையில், நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சு பற்றாக்குறை இருப்பின், மத்திய அரசு நுால் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டுமென, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தற்பொழுது உள்நாட்டுப் பண்டிகை மற்றும் வெளிநாட்டு வரியில்லா புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக நமது மாநிலத்துக்கு அதிகமான ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நுால் விலை ஏற்றத்தின் காரணமாகவும் மூலப்பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்து, ஆர்டர்கள் ஒப்பந்தம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சில பெரிய நுாற்பாலைகள் பதுக்கி வைத்துள்ள பஞ்சை வெளியே கொண்டுவர, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.