Education
அரசு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி சாதனை

திண்டிவனம் தாலுகா, மயிலம் ஒன்றியம் செ.கொத்தமங்கலத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 1949ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக துவங்கப்பட்டது.
பிறகு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மீண்டும் 2011ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இன்று வரை உயர்நிலைப் பள்ளியாக மிகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது.
இப்பள்ளிக்கு கொத்தமங்கலம் ஊராட்சி தலைவி மலர்கொடி பூபதி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் சாமிக்கண்ணு, லட்சுமணன ஆகியோர் மூலமாக பள்ளிக்கு 80 செண்ட் (3,240 சதுர பரப்பளவு) நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
ஊராட்சி செயலாளர் பார்த்தசாரதி, வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மைக் குழு தலைவிகள் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கிராம மக்கள் பள்ளியின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகின்றனர்.
இரண்டு தளங்களுடன் கட்டடம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் நபார்டு வங்கியின் மூலம் 1.60 லட்சம் ரூபாய் செலவில் தரைத் தளத்துடன் இரண்டு தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு தரைத் தளத்தில் கணினி ஆய்வகம், தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை, அலுவலக அறை, பத்தாம் வகுப்புகளுக்கான அறை மற்றும் மாணவர்களுக்கான ஐந்து யூனிட் கழிவறைகள் உள்ளன.
முதல் தளத்தில் நான்கு வகுப்பறைகள் மாணவிகளுக்கான ஐந்து யூனிட் கழிவறைகளும், இரண்டாம் தளத்தில் நுாலகம் மற்றும் மாணவர்களுக்கான கூட்ட அரங்கம், அறிவியல் ஆய்வகம் அமையப்பெற்றுள்ளது.
பள்ளியில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. போர்வெல் மூலம் பிற பயன்பாட்டிற்கு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது மாணவர்கள் தங்களது மதிய உணவு அருந்திய பின் கை மற்றும் தங்களது மதிய உணவு பிளேட்டுகளை கழுவுவதற்கு தனியாக சிங்க் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
6 அடி உயர்த்திற்கு சுற்றுச்சுவர் அதேபோல மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் முயற்சியால் மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் 480 மீட்டர் அளவிற்கு 6 அடி உயரத்தில் மதில் சுவர் 34 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. பள்ளி நுழைவு வாயிலில் உயரமான கேட் பொருத்தப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டு 5 ஆண்டுகளாக சிறப்பாக பராமரிக்கப்பட்டு நிழலான பள்ளி வளாகமாக இருந்தது வருகிறது. பூவரசு, புங்கை, வேப்பம், நாவல்,இருவாச்சி, செங்கொன்றை, பாரிஜாதம், நந்தியா வட்டம், செவ்வாழை, கற்பூர வாழை, நித்திய கல்யாணி, சோற்றுக் கற்றாழை, மகோகனி, தேக்கு, எலுமிச்சை, நார்த்தை, கொய்யா போன்ற மரங்கள் பராமரிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளது.
மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி தற்போது வரை, பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி பெற்ற ஆசிரியர் கொண்டு தற்காப்பு பயிற்சி வாரம் தோறும் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் வானவியல் மன்றம் சார்பில் அறிவியல், கணிதம் சார்ந்த நிகழ்வுகள் வானவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தினம்தோறும் காலை, மாலை ஆயத்த வகுப்பு, மாலை வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்புப் வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
உடற்கல்வி ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு உடற்கல்வி சார்ந்த பயிற்சிகள், தேர்வுகள் அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது.
100 சதவீதம் தேர்ச்சி தற்போது பள்ளியின் தலைமையாசிரியராக நல்லாசிரியர் விருது பெற்ற தண்டபாணி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் பணிபுரிந்து வருகிறார். பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத் தேர்வை பெரியதச்சூர் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று எழுதி வருகின்றனர். தண்டபாணி தலைமையாசிரியராக பொறுப்பேற்றது முதல் பொதுத்தேர்வில் மாணவர்கள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
இதனால், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோரை ஊராட்சி தலைவர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் போன்றவர்களால் பாராட்டப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களும் பாராட்டப்படுகின்றனர். கடந்த 2023–2024ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக முன்னாள் தமிழக முதல்வரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரியல் டிரஸ்ட் மூலம் விளையாட்டுப் பொருட்கள் மாணவர்களுடைய நலன் கருதி நாப்கின் எரியூட்டு இயந்திரம், யோகா மேட், மியூசிக் கருவிகள், சிங்க் தொட்டிகள், ஒலிபெருக்கி ஆகியவை வழங்கப்பெற்று தற்போதும் பயன்பாட்டில் உள்ளது.
இவை அனைத்திற்கும் பள்ளி ஆசிரியர்கள் அம்புரோஸ், ஜெயராஜ் பிரபு, புருஷோத்தமன், கோவிந்தன், சண்முகம், குமரவேல், ரேகா ஆகியோர் தலைமை ஆசிரியருடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாலும், கிராம மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் ரகு ஆகியோரின் வழிகாட்டுதலுடன் இப்பள்ளி சிறப்புடன் செயல்படுகிறது. நான் தலைமை ஆசிரியராக இருந்தாலும் அனைத்து ஆசிரியர்களும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பு தருவதால், இப்பள்ளி பொதுத் தேர்வுகளில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. மாணவர்கள் தாய் மொழியான தமிழில் பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் அதிக அளவில் முயற்சிகளை மேற்கொள்கிறேன். இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண்களை மாணவர்கள் சிரமமின்றி எடுத்து வருகின்றனர். எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளை சந்திக்கும் வகையில் அவர்களுக்கு திறமையான பயிற்சிகள் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் இப்பள்ளியை, சக ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் தமிழகத்திலேயே முதன்மைப் பள்ளியாக மாற்றிக் காட்டுவேன்.
–தண்டபாணி, தலைமையாசிரியர்.