ரூ.284 கோடியில் மாதவரத்தில் பணிமனை தயார்: மெட்ரோ ரயில்கள் நிறுத்த 24 பாதைகள் அமைப்பு

சென்னை: மாதவரத்தில், 284 கோடி ரூபாயில் புதிய மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. ரயில்களை நிறுத்துவதற்காக 24 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி உட்பட மூன்று வழித்தடங்களில் 63,246 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 119 கி.மீ., துாரம், 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மெட்ரோ ரயில்களை பராமரித்து இயக்கும் வகையில், மாதவரம் மற்றும் பூந்தமல்லி ஆகிய இரண்டு இடங்களில், புதிய பணிமனைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், பூந்தமல்லி பணிமனை பணிகள் முடிந்து, பல கட்ட சோதனைகள் முடித்து, தயாராக உள்ளன. பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்போது, இது, முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும்.
இதற்கிடையே, மாதவரத்தில் 48.89 ஏக்கர் பரப்பளவில் 284.51 கோடி ரூபாயில் நடந்து வரும் பணிமனை கட்டும் பணிகளும் முடிந்துள்ளன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்களை பராமரித்து இயக்க வசதியாக, மாதவரம், பூந்தமல்லியில், பணிமனைகள் அமைத்துள்ளோம்.
இரண்டு வழித்தட மெட்ரோ ரயில்களை பராமரிக்கும் வகையில், மாதவரம் மெட்ரோ பணிமனை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளும் முடிந்துள்ளன.
மூன்று பெட்டிகள் அடங்கிய ஒரு ரயில் என்ற அடிப்படையில், மொத்தம் 110 மெட்ரோ ரயில்கள், 'ஷிப்ட்' முறையில் இங்கு நிறுத்த முடியும்.
ரயில்கள் நிறுத்தும் பாதைகள் -- 10; பழுது மற்றும் சுத்தம் செய்ய -- ஏழு பாதைகள் உட்பட மொத்தம் 24 ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, 1.4 கி.மீ., துாரத்திற்கு சோதனை ஓட்டத்திற்கான இருப்பு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக, பல்வேறு கட்ட பாதுகாப்பு சோதனைகள் நடத்த உள்ளோம்.
மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சிறுசேரி வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் போது, இந்த பணிமனை முழு அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.