Religion
கரைப்புதுார் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் மஹா கும்பாபிேஷகம் விமரிசை
திருப்பூர்:ஓம்சக்தி... பராசக்தி கோஷம் முழங்க... கரைப்புதுார் ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்கள் மஹா கும்பாபிேஷகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
பல்லடம், கரைப்புதுாரில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் விநாயகர், பாலசுப்ரமணியர் ஆகிய சன்னதிகளும், ஸ்ரீ முனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் இடம் பெற்ற கோவிலில், திருப்பணிகள் நிறைவு பெற்று, 23-ம் தேதி முகூர்த்தக்கால் நாட்டப்பட்டு, கும்பாபிேஷக பஜைகள் துவங்கின.
கடந்த 15-ம் தேதி கணபதி ஹோமம், மகஹலட்சுமி கலச ஆவாஹணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீலட்சுமி நகர் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. அன்று மாலை யாகசாலை பிரவேசம், விநாயகர் வழிபாடு மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை விநாயகர் வழிபாட்டுடன் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
அதன்பின், தீர்த்த கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 7:35 மணிக்கு விமான கோபுரம் மற்றும் பரிவார கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது. கோபுர கலசங்கள் மீது புண்ணிய தீர்த்தங்களால், கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குருக்கம்பாளையம் ஆதீனம் தியாகராஜசுவாமிகள், கூனம்பட்டி திருமடம் நடராஜ சுவாமிகள் அருளாசி வழங்கினர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் குமாரசுப்ரமணிய சிவாச்சாரியார் குழுவினர் சர்வ சாதகம் நிகழ்த்தினர். கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் விழாக்குழுவினர் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.