'ஈக்வல் எர்த் மேப்' ; அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி 'சமமான உலக வரைபடம்' சாத்தியமா? -ஐநா கண்ணன் விளக்கம்

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் உலக வரைபடக் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐக்கிய நாடுகள் சபை (UN) தற்போது தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக நாடுகளின் நிலப்பரப்பை அதன் உண்மையான அளவின்படி துல்லியமாகக் காட்டும் 'ஈக்வல் எர்த் மேப்' என்ற புதிய திட்டத்தை ஐநா முன்மொழிந்துள்ளது. ஆனால், இந்த புதிய வரைபடத் திட்டத்திற்கு அமெரிக்கா போன்ற சில மேற்கத்திய நாடுகள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐநா அதிகாரி கண்ணன் நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"உலகில் ஒரு நியாயமான பார்வை உருவாக வேண்டுமானால், முதலில் ஒரு நியாயமான உலக வரைபடம் இருக்க வேண்டும். இதற்காகவே ஐநா சபை தற்போது 'ஈக்வல் எர்த் மேப்' என்ற புதிய வரைபட முறையை உலக நாடுகளுக்குப் பரிந்துரை செய்து வருகிறது. இந்த வரைபடத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது நாடுகளின் வடிவத்தை விட, அவற்றின் உண்மையான நிலப்பரப்பின் அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதால், இதில் நாடுகள் தங்களின் உண்மையான புவியியல் அளவோடு காட்சியளிக்கின்றன. இந்த புதிய வரைபடத்தில் பார்க்கும்போது, ஆப்பிரிக்கக் கண்டம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதும், ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து நாடுகள் நாம் நினைத்தது போல அவ்வளவு பெரிய நிலப்பரப்பு கொண்டவை அல்ல என்பதும் தெளிவாகத் தெரியவரும். ஆனால், இந்த உண்மையான வரைபடத் திட்டத்தை அமெரிக்கா போன்ற நாடுகள் ஏனோ இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றன.
ஏனெனில், கூகுள் நேவிகேஷன் உள்ளிட்ட நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இன்னமும் பழைய மெர்கேட்டர் வரைபடத்தின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் தங்களின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த வரைபடங்களை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஐநா சபை இந்த புதிய வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்த முயன்றாலும், அது உலக நாடுகள் அனைத்திற்கும் சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட வேண்டிய கட்டாய விதியாக மாற இன்னும் காலம் எடுக்கும். எனினும், உலக மக்களின் சிந்தனையில் இருக்கும் புவியியல் ரீதியான ஆதிக்கப் பார்வையை மாற்றி, அனைத்து நாடுகளுக்கும் சமமான அங்கீகாரத்தை வழங்க இந்த புதிய வரைபடப் புரட்சி மிக அவசியமான ஒன்றாகும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)