நாம் பார்க்கும் உலக வரைபடம் பொய்யா? பின்னணியில் இருக்கும் உலக அரசியல் என்ன?-விளக்கும் ஐநா கண்ணன்

உலக நாடுகள் அனைத்தும் தங்களின் புவியியல் அமைப்பை அறிந்துகொள்ள பல நூற்றாண்டுகளாக ஒரே மாதிரியான உலக வரைபடத்தையே பயன்படுத்தி வருகின்றன. ஆனால், நாம் பள்ளிக்கூடங்கள் முதல் கூகுள் மேப் வரை பார்க்கும் இந்த வரைபடம் துல்லியமானது தானா என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது. குறிப்பாக, வல்லரசு நாடுகள் தங்களின் மேலாதிக்கத்தைக் காட்டுவதற்காக உலக வரைபடத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்துள்ளனவா என்ற அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐநா அதிகாரி கண்ணன் நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது,"நாம் இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தும் உலக வரைபடமானது 'மெர்கேட்டர் வரைபடம்' என்று அழைக்கப்படுகிறது. இதனை 16-ஆம் நூற்றாண்டில் ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்ற பிளெமிஷ் புவியியலாளர் மற்றும் வரைபடக் கலைஞர் உருவாக்கினார். அந்த காலகட்டத்தில் கடல் வழிப் பயணங்களுக்கும், கப்பல் போக்குவரத்தின் திசைகளைக் கண்டறிவதற்கும் மட்டுமே இந்த வரைபடம் வடிவமைக்கப்பட்டது.
உருண்டையாக இருக்கும் பூமியை ஒரு தட்டையான காகிதத்தில் துல்லியமாகக் கொண்டு வருவது என்பது கணித ரீதியாகச் சாத்தியமில்லாத ஒன்று. இதனால், இந்த மெர்கேட்டர் வரைபடத்தில் நிலப்பரப்புகளின் உண்மையான அளவுகள் மாறத் தொடங்கின. குறிப்பாக, பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகள் சிறியதாகவும், துருவப் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் நாடுகள் அவற்றின் உண்மையான அளவை விடப் பல மடங்கு பெரியதாகவும் இந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.
இதன் மிகப்பெரிய பாதிப்பு ஆப்பிரிக்கக் கண்டத்திற்குத்தான் ஏற்பட்டுள்ளது. மெர்கேட்டர் வரைபடத்தில் ஆப்பிரிக்காவும் கிரீன்லாந்தும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருப்பது போலக் தோன்றும். ஆனால் அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நிஜ உலக புவியியல் அமைப்பின்படி, ஆப்பிரிக்கக் கண்டமானது கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாகும். அதேபோல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் அரசியல் மற்றும் பொருளாதார வல்லாதிக்கத்தை உலகிற்கு பறைசாற்றிக் கொள்வதற்காக இந்த வரைபடத்தையே தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.
ஒரு நாட்டின் நிலப்பரப்பு பெரியதாகக் காட்டப்படும் போது, அது அந்த நாட்டின் அதிகாரத்தையும் பெருமையையும் மறைமுகமாக மக்களின் மனதில் விதைக்கிறது. இந்த வரைபடக் குளறுபடிகளால் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற வளங்கள் நிறைந்த நாடுகள் உலக வரைபடத்தில் மிகச் சிறிய நாடுகளாகச் சுருக்கப்பட்டு, அவற்றின் புவியியல் முக்கியத்துவம் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)