Religion
மாவட்டத்தில் 765 விநாயகர் சிலை வைத்து வழிபாடு

நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, உற்சாகமாக சுவாமியை வழிபட்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள், பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா, 1655ல், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சி காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இது இன்றளவும், மஹாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக உள்ளது. பொதுமக்கள், தங்கள் வீடுகளில் பிள்ளையாரை வைத்து வணங்குகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனுார், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும், பந்தல்கள் அமைத்து, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு, அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிக்கு எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை போன்றவற்றை அணிவித்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், நாமக்கல் சந்தைப்பேட்டைபுதுார் செல்வவிநாயகர் கோவிலில், விநாயகருக்கு பிரமாண்டமாக தசாவதார அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள செங்கழுநீர் பிள்ளையார் கோவில், சேலம் சாலையில் உள்ள மாயம்பிள்ளையார் கோவில், திருச்செங்கோடு சாலையில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவில், கணேசபுரம் பிள்ளையார் கோவில், மோகனுார் சாலை, டீச்சர்ஸ் காலனி கல்வி விநாயகர் கோவில், அன்பு நகர் விநாயகர் கோவில், முல்லை நகர் செல்வ
கணபதி கோவில். நாமக்கல் அழகு நகர் சக்தி கணபதி கோவில் உள்ளிட்ட அனைத்து விநாயகர் கோவில்களிலும், விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும்
பிரசாதம் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம், ௭௬௫ சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது..