Education
பேரூர் வட்டார கல்வி அலுவலருக்கு தேசிய விருது
கோவை: இந்திய அரசின் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.இ.பி.ஏ.,) சார்பில், 2023–24, 2024–25ம் ஆண்டுகளில் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா டில்லியில் நடந்தது.
நாடு முழுவதும் பள்ளிக் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் புதுமையான முயற்சிகளை செய்த 84 கல்வி அலுவலர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த குளோரி ஸ்டெல்லாவும் ஒருவர். இவர், பேரூர் வட்டாரக் கல்வி அலுவலராக வேலை பார்க்கிறார்.
பொள்ளாச்சி தெற்கு வட்டார கல்வி அலுவலராக இருந்தபோது, பள்ளிக் கல்வியில் புதுமையான முயற்சிகளை செய்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் உள்ள 81 பள்ளிகளில், 39 பள்ளிகள் இவரது நேரடி மேற்பார்வையில் செயல்பட்டன.
பள்ளிகளை தொடர்ந்து ஆய்வு செய்து, மாணவர்களின் கற்றல் திறன், வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத் திறன்களை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார்.
இவரது வழிகாட்டுதலில் செயல்பட்ட மேலுார் ஒன்றியம், மாணவர்களின் வாசிப்புத் திறன் வளர்ச்சியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றது. அரசுப்பள்ளி மாணவர்கள் என்.எம்.எம்.எஸ். தேர்வில் வெற்றி பெறவும் வழிகாட்டியுள்ளார்.