கூரை விழுந்து காயமடைந்த மாணவி ஐ.சி.யூ.வில் ‘அட்மிட்’
குன்றத்துார்: சோமங்கலம் அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் காயமடைந்த மாணவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நள்ளிரவில் தலை சுற்றல் அதிகமானதால், தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ., எனும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
குன்றத்துார் அடுத்த சோமங்கலம், மேலாத்துாரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் பிளஸ் 1 வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை கான்கிரீட் பூச்சு, நேற்று முன்தினம் காலை, திடீரென பெயர்ந்து விழுந்தது.
இதில், நடுவீரப்பட்டு எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ஜாய் மெர்சி, 16, என்ற மாணவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த சில மாணவர்களுக்கும், லேசான காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மாணவி, அருகேயுள்ள ஆரம்ப மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவரது தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டன. பின், வீட்டிற்கு சென்ற மாணவிக்கு, இரவில், தலை சுற்றல் அதிகமாகி உள்ளது.
இதையடுத்து தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவிக்கு சி.டி., ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில், நேற்று காலை மாணவிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. பின் அவசர சிகிச்சை பிரிவில் மாணவி அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாணவி நலமுடன் உள்ளதாக, சோமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.