சோமங்கலம் அரசு பள்ளி கூரை பெயர்ந்து விழுந்து மாணவி காயம்
குன்றத்துார்: சோமங்கலத்தில், அரசு பள்ளி வகுப்பறையின் கான்கிரீட் கூரை பெயர்ந்து விழுந்ததில், 16 வயதுடைய பிளஸ் 1 மாணவி காயமடைந்தார்.
குன்றத்துார் அடுத்த சோமங்கலம், மேலாத்துாரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் 2006ல் கட்டப்பட்ட பிளஸ் 1 வகுப்பறை கட்டடம், சில ஆண்டுகளாக சிதிலமடைந்து, சுவர், கான்கிரீட் கூரையில் விரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த வகுப்பறையின் கூரை கான்கிரீட் பூச்சு, நேற்று காலை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், நடுவீரப்பட்டு எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ஜாய் மெர்சி, 16, என்ற மாணவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த சில மாணவர்களுக்கும், லேசான காயம் ஏற்பட்டது.
காயமடைந்த மாணவியை மீட்ட ஆசிரியர்கள், அருகேயுள்ள ஆரம்ப மருத்துவ நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, மாணவியின் தலையில் ஐந்து தையல்கள் போடப்பட்டன.
சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். வகுப்பறையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து மாணவி காயமடைந்த சம்பவம், மாணவர்களின் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.