Religion
மகாமகத்திற்கு ரூ.600 கோடி செலவு என கணக்கீடு: அமைச்சர் ரமேஷ்

தஞ்சாவூர்: மகாமகத்திற்கு, அனைத்து துறைகளையும் சேர்த்து, சுமார் 600 கோடி ரூபாய் செலவினங்கள் ஏற்படும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 2028ம் ஆண்டு மகாமக விழா, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில், வேளாண்துறை அமைச்சர் வினோத், எம்.பி சுதா, தஞ்சாவூர் எம்.எல்.ஏ., சரவணன், கலெக்டர் ரேவதி, எஸ்.பி சுந்தரவதனம், அறநிலையத்துறை கமிஷனர் வினய் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: கும்பகோணத்திற்கு மட்டுமல்ல, தமிழக்திற்கே பெருமை சேர்க்கக்கூடியது, மகாமக திருவிழா. அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு விரைவில் மகாமக பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக உயர் அதிகாரிகள் அளவிலான குழு அமைக்கப்பட்டு, கூட்டம் நடத்தப்பட்ட உள்ளன. பிறகு, முதல்வரின் உத்தரவின் பேரில், கூடுதலாக மேற்கொளள வேண்டிய பணிகள் துரிதப்படுத்தப்படும்.
மத்திய அரசிடம் இருந்து என்னென்ன தேவைகள் என்பதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். மகாமகத்தை மிக சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மகாமக பணிகள் அனைத்தும் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் முடிவடையும்.
கடந்த முறை மகாமகத்தின் போது, சுமார் 50 லட்சம் பேர் கலந்துக்கொண்டனர். இம்முறை 90 லட்சம் பேர் வரை கலந்துக்கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கிறோம். எனவே முதற்கட்டமாக அனைத்து துறைகளையும் சேர்த்து, சுமார் 600 கோடி ரூபாய் செலவினங்கள் ஏற்படும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையும் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும், அந்தந்த துறைகளுக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்துள்ளோம்.
கும்பேஸ்வரர் கோவில் ராஜகோபுர கட்டுமான பணிகள் குறித்து அறநிலையத்துறையின் பாரம்பரிய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அவர்களது ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் பணிகள் தொடங்கும். 17 கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் வெகு விரைவில் நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்.