Arts, culture, entertainment and media
விமான நிலையத்தில் நாப்கின் கிடைக்காமல் டிவி சீரியல் நடிகை அவதி

சென்னை:சென்னை விமான நிலையத்தில், 'நாப்கின்' கிடைக்காமல், 'டிவி' சீரியல் நடிகை லதாராவ் அவதிப்பட்டுள்ளார்.
'டிவி' சீரியல் நடிகர் லதாராவ். இவர், தெலுங்கானா மாநிலம், ைஹதராபாத் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்தில், பெண்களுக்கு நாப்கின் கிடைக்கும் வசதி உள்ளதா என, கேட்டுள்ளார். அந்த வசதி கைவிடப்பட்டு விட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே ஏழாவது கேட் அருகே உள்ள, மருந்து கடைக்கு சென்றுள்ளார். அங்கு இருக்கையில் ஆள் இல்லை. விமானம் புறப்படும் நேரம் ஆனதால் பதற்றத்துடன் காணப்பட்ட அவர், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். பின் மருந்து கடையில்ஆள் வந்ததும், நாப்கின் வாங்கி விட்டு, விமான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள 'வீடியோ' வில், பெண்கள் வெளியே செல்லும் போது, பையில் நாப்கின் எடுத்து வைத்து விட்டோமா என, மறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என, கூறியுள்ளார்.
சென்னை விமான நிலைய பெண்கள் கழிப்பறையில் நாப்கின் திட்டம் கைவிடப்பட்டது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தில், பெண்கள் கழிப்பறையில் நாப்கின் கிடைக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்த கருவி தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், அவசர தேவைக்கு நாப்கின் கிடைக்க தொடர்பு கொள்ளவும் என, மொபைல் போன் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் தொடர்பு கொண்டால், இரண்டு நிமிடங்களில் நாப்கின் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பெண்கள் கழிப்பறையில், புதிதாக 36 நாப்கின் கிடைக்கும் கருவிகள் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.