Arts, culture, entertainment and media
நாப்கின் இல்லை... விமான நிலையக் கழிவறையில் அனுபவித்த துயரத்தைப் பகிர்ந்த நடிகை!

சென்னை விமான நிலையத்தில் நாப்கின் கிடைக்காமல் நடிகை லதா ராவ் அவதி. மாதவிடாய் ஏற்பட்டதால் சிரமம். வெளியே செல்லும் பெண்கள் நாப்கின் எடுத்துச் செல்ல அறிவுறுத்தல்.
சென்னை விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த நிலையை நடிகை லதா ராவ் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ்ச் சீரியல் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை லதா ராவ். 'மெட்டி ஒலி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த இவர், சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதற்கிடையே, லதா ராவ் ஐதராபாத் செல்ல திட்டமிட்டு அதற்காக சென்னை விமான நிலையம் வந்திருக்கிறார். அங்கு வந்தபோது திடீரென அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமான நிலையத்தில் நாப்கின் கிடைக்குமா என விசாரித்த அவருக்கு, பெண்கள் கழிப்பறையில் நாப்கின் வழங்கும் வசதி இப்போது செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ள லதா ராவ், விமான நிலையத்தில் இருந்த மெடிக்கலுக்குச் சென்றபோது அங்கே பணியாளர்கள் இல்லை என்பதால் சிரமமடைந்ததாகக் கூறியிருக்கிறார்.
மேலும், விமானம் புறப்படும் நேரத்தில் இவை நடந்ததால் மன உளைச்சல் அடைந்ததாகவும், கடைசி நேரத்தில் மெடிக்கல் பணியாளர் வந்து அவரிடம் நாப்கின் வாங்கியதாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், வெளியே செல்லும் பெண்கள் நாப்கின் எடுத்துச் செல்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் லதா ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
