செங்கை – கடற்கரை ‘ஏசி’ மின் ரயில் தினம் 30 நிமிடம் தாமதம் என புகார்
சென்னை: செங்கல்பட்டு – கடற்கரை ‘ஏசி’ மின்சார ரயில், தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் முதல் முறையாக, சென்னை கடற்கரை - – தாம்பரம் –- செங்கல்பட்டு வழித்தடத்தில், 2025 ஏப்., மாதம் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் எட்டு சேவை மட்டுமே இருந்த நிலையில், பயணியரின் விருப்பத்துக்கு ஏற்ப, நேரம் மாற்றியமைக்கப்பட்டு, கூடுதல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரயில் தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் குற்றம்சாட்டி உள்ளனர்.
வழக்கமான மின்சார ரயில்களைவிட, ‘ஏசி’ மின்சார ரயிலில் கட்டணம் கூடுதலாக இருக்கிறது. ஆனால் சரியான நேரத்தில் இயக்குவதில்லை. பெரும்பாலான நாட்களில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக செல்வதால், பாதிப்பு ஏற்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து புறப்படும்போதே 10 நிமிடம் தாமதம் ஆகிறது. பின், தாம்பரம், மாம்பலம், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த ‘ஏசி’ ரயிலை தாமதம் இன்றி இயக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
கடற்கரை – செங்கல்பட்டு ‘ஏசி’ மின்சார ரயிலுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரை, கிண்டி, தாம்பரம், மாம்பலம், பெருங்களத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணியர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
தொடக்கத்தில் 1,488 ஆக இருந்த தினசரி பயணியர் எண்ணிக்கை, தற்போது 2,800 ஆக உள்ளது. பயணியர் புகார் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.