இந்தோனேஷியா எரிமலை வெடிப்பு விமான சேவை பாதிப்பு
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில், கிரகடாவ் எரிமலை வெடித்து சிதறியதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் முக்கிய தீவுகளான ஜாவா – சுமத்ராவுக்கு இடையே, சுந்தா ஜலசந்தியில் அமைந்துள்ளது அனாக் கிரகடாவ் எரிமலை. இந்த எரிமலை நேற்று அதிகாலை வெடித்து சிதறியது.
எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை, 50,000 அடி உயரம் வரை பரவி, ஜகார்த்தா, பான்டன் மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளை மூடியதால், ஜகார்த்தா உட்பட ஆறு விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதனால், 58 சர்வதேச சேவைகள் உட்பட, 301 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 2018ல், இந்த எரிமலையின் திடீர் வெடிப்பால் நிலச்சரிவு ஏற்பட்டு கடலுக்குள் விழுந்ததால், சுனாமி பேரலை உருவாகி, 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.