Lifestyle and human interest
போலீசாரின் மனிதாபிமானம்: நாகையில் நெகிழ்ச்சி

நாகப்பட்டினம்: நாகையில், மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை கைது செய்தபோது, போலீசார் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும், உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி, நாகை, கலெக்டர் அலுவலக வாயிலில் மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான போலீசார், கலெக்டர் அலுவலக வாயிலை பூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் அமர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தனது வாகனத்தில் இருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார். தொடர்ந்து அவர்களை கைது செய்வதாக அறிவித்த போலீசார், போலீஸ் வாகனத்தில் ஏறுமாறு கூறினர்.
பார்வையற்ற, நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளை, பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ் மற்றும் ராணி ஆகியோர் அவர்களை துாக்கி வாகனத்தில் அமர வைத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் போலீசாரின் மனிதாபிமானம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
