உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு
மீஞ்சூர், செப். 9– அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே, உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால்,
அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே, உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால், சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக, அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் அருகே, ரயில் போக்குவரத்திற்கான உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது.
இதனால், சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வரும் இரவு நேர ரயில்கள், விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.
திருவொற்றியூர், பேசின்பாலம், பொன்னேரி ஆகிய ரயில்வே பணிமனைகளில் இருந்து, ஊழியர்கள் விரைந்து சென்று, அறுந்த மின் கம்பியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
சீரமைப்பு பணிகளுக்கு பின், ரயில்கள் புறப்பட்டு சென்றன. நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், இரவு நேர பணிக்கு சென்று, வீடு திரும்பிக்கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள், கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.