யானை தந்தம் விற்க முயன்ற இருவர் கைது

மூணாறு: யானை தந்தத்தை விற்க முயன்ற இருவரை வனத்துறை புலானாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே யானை தந்தம் விற்க முயற்சி நடப்பதாக வனத்துறை புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அடிமாலி அருகே இரும்புபாலம் பகுதியில் யானை தந்தத்தை விற்க தயார் நிலையில் இருந்த மச்சிபிளாவ் பகுதியை சேர்ந்த பிரிஜித் 19, சுனீஷ் 22, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 8 கிலோ எடை கொண்ட யானை தந்தம், அதனை கடத்தி வர பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தந்தம் நீண்ட காலம் பழக்கம் வாய்ந்ததாகவும், அதனை எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விற்க முயற்சி நடந்ததாகவும் தெரியவந்தது. இச்சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதால் முழுமையான தகவல்களை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். நேரியமங்கலம் வனத்துறை அதிகாரி ஷகநாஸ், வாளாரா வனத்துறை அதிகாரி ஆனந்த் ஆகியோர் தலைமையில் தனிப்படையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.