Economy, business and finance
காய்கறி விலை கிடுகிடு உயர்வு இல்லத்தரசிகள் அதிருப்தி
சென்னை, செப். 15– காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்து
காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இவை மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. எனவே, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு காய்கறிகள் எடுத்து வரப்படுகின்றன. பெரிய வெங்காயம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், உருளை கிழக்கு உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இருந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் உள்ளது. சில்லறை விலையில் பல வகை காய்கறிகள் கிலோ 70 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
முன்பு வாரத்திற்கு 300 ரூபாய்க்கு வாங்கிய காய்கறிகளுக்கு, இப்போது 600 ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டிய நிலை பல குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், குடும்ப செலவு அதிகரித்து வருவதால், சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் வசிப்பவர்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விளைச்சல் குறைவு, எரிபொருள் விலையால் வாகன வாடகை உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாக கமிஷன் ஏஜன்டுகள், வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80–100 ரூபாய்க்கும், தக்காளி 50–60 ரூபாய்க்கும், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், பாகற்காய், பீட்ரூட், சேனைக்கிழங்கு, பச்சைமிளகாய் அவரைக்காய், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ 80–100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி ஒரு கிலோ 170–200க்கு விற்கப்படுகிறது. விலை அதிகரிப்பால், காய்கறிகளை வாங்குவதற்கு சந்தைகளுக்கும், கடைகளுக்கும் செல்லும் பொதுமக்கள், இல்லத்தரசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.