மருத்துவ கல்லுாரியில் படித்தவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

சென்னை: சென்னை மருத்துவக் கல்லுாரியில், 50 ஆண்டுகளுக்கு முன் படித்த டாக்டர்கள் சந்தித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை மருத்துவக் கல்லுாரியில், 1976 – 1981ம் ஆண்டுகளில், மருத்துவ படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின், 50வது ஆண்டு பொன்விழா சந்திப்பு நிகழ்ச்சி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தமிழகம், வெளிமாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் டாக்டர்கள், 110 பேர் வந்திருந்தனர்.
ஆண்கள் ஒரே மாதிரியான பட்டு வேட்டியும், பெண்கள் ஒரே நிறத்திலான பட்டு புடவையும் அணிந்து பங்கேற்றனர்.
அவர்கள் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பறைக்கு சென்று, கல்லுாரி கால பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
பின், குழு புகைப்படம் எடுத்து கொண்டதுடன், கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர். அத்துடன், ஆதரவற்ற ஐந்து பெண்களுக்கு, ‘பிங்க்’ நிற ஆட்டோவையும், முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
இதுகுறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான முன்னாள் மாணவர் டாக்டர் மகேந்திரன் கூறியதாவது:
இந்த சந்திப்பு, கல்லுாரி காலங்களுக்கே மீண்டும் அழைத்து சென்றுவிட்டது. சில நண்பர்களை நீண்ட ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மகிழ்ந்தோம். சென்னை மருத்துவக் கல்லுாரியில் அமைக்கப்படும் வரும் அருங்காட்சியக பணியை, அரசு விரைந்து முடிக்க வேண்டும்.
எங்களது பொன்விழாவை முன்னிட்டு, ஆதரவற்ற ஐந்து பெண்களுக்கு ஆட்டோ வழங்குகினோம். மேலும், ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், இதய துடிப்பை ஆய்வு செய்து, லேசான மின்சார அதிர்த்து கொடுத்து உயிரை காக்கும், 200 ஏ.இ.டி., இயந்திரங்கள், மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.