Politics
யமுனை நீர்வளத்தை பகிரும் திட்டம்: 6 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுடில்லி: யமுனை ஆற்றுப்படுகையின் நீர்வளத்தை பாசனம், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தும் கிஷாவ் பன்முகத் திட்டம், நீண்டகால தாமதத்துக்கு பிறகு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
திட்டத்தை செயல்படுத்த உத்தர பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், டில்லி மற்றும் ஹரியானா ஆகிய ஆறு மாநிலங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
நீர் எப்படி பகிரப்படும்?
ஹிமாச்சல பிரதேசத்துக்கு ஒதுக்கப்படும் நீரில் ஒரு பகுதியை டில்லி மற்றும் ராஜஸ்தானுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, மின் திட்டத்தில் ஹிமாச்சலத்தின் செலவு பங்கை அந்த மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளும். திட்டத்தின் நீர்வள பகுதிக்கான செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசு நிதியுதவியாக வழங்கும். மீதமுள்ள 10 சதவீத செலவை 6 மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும்.
என்ன பயன்?
திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 97,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மேலும், டில்லி மற்றும் ராஜஸ்தானின் குடிநீர் மற்றும் தொழில் துறை நீர் தேவைக்கும் அணையில் சேமிக்கப்படும் நீர் பயன்படுத்தப்படும். அணையில் சேமிக்கப்படும் நீர் யமுனை ஆற்றின் நீரோட்டத்தை அதிகரிக்கவும், ஆற்றை புத்துயிர் பெற செய்யும் முயற்சிக்கும் பயன்படுத்தப்படும்.
மேல் யமுனை பகுதியில் நீர் பங்கீடு தொடர்பாக 1994ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ரேணுகாஜி, லக்வார் திட்டங்களை தொடர்ந்து, ஆறு மாநிலங்கள் ஒப்பந்தம் செய்துள்ள மூன்றாவது முக்கிய நீர் சேமிப்பு திட்டம் கிஷாவ்.
*ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் அரசுகளின் கூட்டு நிறுவனமான கிஷாவ் கார்ப்பரேஷன் லிமிடெட் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. *திட்டத்தின் நீர்வள பகுதிக்கான செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசு நிதியுதவியாக வழங்கும். *மீதமுள்ள 10 சதவீத செலவை ஆறு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும்.*ஆறு மாநிலங்களின் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கிஷாவ் பன்முக திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த திட்டம் ஆறு மாநிலங்களுக்கும் பயன் அளிக்கும். பாசனம் மற்றும் குடிநீர் வசதி அதிகரிப்பதுடன், யமுனை ஆற்றை பாதுகாக்கவும் உதவும்.— அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர்
