Lifestyle and human interest
2 நாட்களாக மின்வெட்டு ஏற்படக் காரணம்... அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கம்!

நெல்லை மாவட்டம் முதலியார்ப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் தீப்பந்தங்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் மின்வெட்டைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மின்வெட்டிற்கான காரணம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை, வடக்கு அரியாவூர் பகுதிகளிலும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து 2ஆவது நாளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் கடவூர் அருகே 10 நாட்களுக்கும் மேலாக 4 முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, திருவள்ளூர் செங்குன்றம் அருகே சிட்கோ மகளிர் தொழில் பூங்காவில் தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகக் கூறி தொழில் நிர்வாகிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே, திடீர் மின்வெட்டு குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.
நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு. தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என்று கூறியிருக்கிறார்.
