Politics
வண்ணமயமான விநாயகர் ஊர்வலம் திருவிழா கோலம் பூண்ட திருப்பூர்
திருப்பூர்:திருப்பூரில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் மாநகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஹிந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மாநகர மாவட்டம் சார்பில் மட்டும் 1,100 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவின் 4-வது நாளான செப்.,17 மாலை ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு, செல்லம் நகர் ஆகிய 3 இடங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சிலைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன.
தாராபுரம் ரோட்டில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், கேரள மாநில தலைவர் சசிகலா டீச்சர் ,ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி, முன்னாள் கவர்னர் சண்முகநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்டை மேளம், தையம் கலைஞர்கள், vமகா பெரிய அளவிலான சிவன் மற்றும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இடம்பெற்றன. ஊர்வலம் கரட்டங்காடு, வெள்ளியங்காடு, தென்னம்பாளையம், டி.கே.டி. பஸ் ஸ்டாப், மேம்பாலம், மாநகராட்சி சந்திப்பு வழியாக ஆலாங்காட்டை சென்றடைந்தது.
புதிய பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய ஊர்வலத்தை நடிகர் ரஞ்சித், ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், குமரன் டிம்பர்ஸ் ஈஸ்வரன், மாநில செயலாளர்கள் செந்தில்குமார், சேவுகன் துவக்கி வைத்தனர். தொடர்ந்து தொண்டர்கள் கொடியுடன் அணிவகுத்து செல்ல, பெண்கள் முளைப்பாலிகை எடுத்து சென்றனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வாகனங்கள் பல்வேறு வீதிகள் வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சென்றடைந்தன.
செல்லம் நகரில் தொடங்கிய ஊர்வலத்தை 42-வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் சண்முகம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மேற்கு நகர பொருளாளர் சஞ்சய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முக்கிய வீதிகள் சென்ற ஊர்வலம் ஆலாங்காட்டை சென்றடைந்தது. ஊர்வலம் சென்ற வழியில் பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று பார்வையிட்டனர்.
விசர்ஜன ஊர்வலத்தையொட்டி மாநகரில் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கமிஷனர் ராஜேஸ்வரி தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட 1,400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.