Economy, business and finance
மாதம் 51% வட்டி வலை... சிக்கிய 5,000 பேர்... ரூ.500 கோடி மெகா மோசடி!

73 லட்சம் ரூபாயை இழந்த ரேவதி, “மாதம் பெரிய அளவில் வட்டி கிடைக்கும்; ஒரே வருடத்தில் முதலீடு இரண்டு மடங்காகத் திரும்பக் கிடைக்கும் என நண்பர்கள், உறவினர்கள் கூறினர்.
சேலத்தைச் சேர்ந்த தனியார் பெயின்ட் நிறுவன மேலாளர் மோகன் முரளி, ‘ப்ராஃபிட் எவர் ஆன்லைன் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் 28 லட்ச ரூபாயை முதலீடாகப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவருகிறது’ என்று சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவில் அண்மையில் புகாரளித்தார். இதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சுமார் 5 ஆயிரம் பேரிடம் 500 கோடி ரூபாய் வரை பெற்று மெகா மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப்போயிருக்கிறார்கள்.
மோகன் முரளியைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளித்துவருகின்றனர். நிறுவனத்தின் இயக்குநராகச் செயல்பட்டுவந்த மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தலைமறைவாக இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மூன்று பேரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இந்த மெகா மோசடி யின் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், “சேலத்தைச் சேர்ந்த விஜயராகவன் - ராகினி தம்பதி, மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் மூவரும் சேர்ந்து, சேலம் அழகாபுரத்தில் ‘ப்ராஃபிட் எவர் ஆன்லைன் டிரேடர்ஸ்’, ‘வாராஹி குரூப்ஸ்’ என்ற பெயர்களில் இரண்டு நிதி நிறுவனங்களை 2024-ம் ஆண்டு தொடங்கியிருக்கிறார்கள். ராகினியை விளம்பரத் தூதராக முன்னிறுத்தி, முதலீடு என்ற பெயரில் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
மாதம் 51 சதவிகிதம் வட்டி!
உள்ளூரில் நல்லபடியாக வியாபாரம் செய்து வளர்ந்துவரும் நடுத்தர தொழில்முனைவோர்களைக் குறிவைத்து, ‘ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் வட்டி; முதலீட்டுத் தொகை ஓராண்டில் இரட்டிப்பு; 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 51 சதவிகிதம் வட்டி’ எனப் படுபயங்கரமான கவர்ச்சித் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஊர் ஊராக நோட்டீஸ் அடித்தும், ஃபிளெக்ஸ் வைத்தும் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். நிறுவனத்தின் நடவடிக்கைகள் வெளிப்படையாக நடப்பதாக நம்பிய பலரும் லட்சங்களில் முதலீடு செய்திருக்கின்றனர். முதலீட்டுக்கான ஆவணங்களை வழங்கியதுடன், வாக்குறுதி அளித்தபடி முதல் இரண்டு மாதங்களுக்கு வட்டித் தொகையையும் வங்கிக் கணக்கில் வரவு வைத்திருக்கிறார்கள்.
இதையடுத்து சேலம் மட்டுமன்றி தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்திருக்கிறார்கள். சுமார் 5 ஆயிரம் பேர் வரை சிக்கியுள்ள நிலையில், வட்டித் தொகையை நிறுத்தியதுடன், ஓராண்டு நிறைவடைந்தும் முதிர்வுத் தொகையைத் திருப்பித் தராமல் இழுத்தடித்திருக்கிறார்கள். சந்தேகமடைந்து அலுவலகத்துக்குச் சென்று கேட்டவர்களும் மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்தே எங்களை அணுகியிருக்கிறார்கள்” என்றார்.
“அம்மா இறந்தார்... அப்பாவுக்கு ஸ்ட்ரோக்!”
73 லட்சம் ரூபாயை இழந்த ரேவதி, “மாதம் பெரிய அளவில் வட்டி கிடைக்கும்; ஒரே வருடத்தில் முதலீடு இரண்டு மடங்காகத் திரும்பக் கிடைக்கும் என நண்பர்கள், உறவினர்கள் கூறினர். அதை நம்பி காட்டை விற்றும், வீட்டை அடமானம்வைத்தும் என் கணவர் பெயரில் 25 லட்சம் ரூபாய், என் பெயரில் 48 லட்சம் ரூபாய் என மொத்தம் 73 லட்சம் ரூபாய் முதலீடு செய்தோம். முதல் ஐந்து மாதங்கள் வரை வட்டி கொடுத்தார்கள். பிறகு எதுவுமே தரவில்லை. `இன்றைக்கு, நாளைக்கு...’ என இழுத்தடித்தவர்கள், கடந்த வாரம் திடீரென அலுவலகத்தைப் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்கள். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறிவருகிறோம். மருந்து குடித்து சாகும் நிலைமையில் இருக்கிறோம்” என்றார்.
18 லட்சம் ரூபாயை இழந்த லாவண்யா, “பத்மா என்ற ஏஜென்ட் மூலம் 10 லட்ச ரூபாய், மற்றொரு ஏஜென்ட் மூலம் 8 லட்ச ரூபாய் என முதலீடு செய்தோம். பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தித்தான் எங்களை பிரைன் வாஷ் செய்தார்கள். அம்மாவுக்கு கிட்னி ஃபெயிலியர் ஏற்பட்டபோது பணத்தைக் கேட்டோம்; தரவில்லை. கடைசியில் அம்மா இறந்துபோனார். கொடுத்த செக்கும் பவுன்ஸாகிவிட்டது. இந்தக் கவலையில் அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டது. கடன் தொல்லையில் தவிக்கிறோம். போட்ட பணம் கிடைத்தால் போதும்” என்றார் ஆதங்கத்துடன்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, “பங்குச் சந்தை முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எம்.எல்.எம் நெட்வொர்க் போன்று ஆட்களைப் பிடித்து, 2 முதல் 4 சதவிகித கமிஷன் கொடுத்து முதலீட்டாளர்களைச் சேர்த்திருக்கிறார்கள். சாமானிய மக்களைவிட, உள்ளூரில் துணிக்கடை, ஃபர்னிச்சர் கடை என வியாபாரம் செய்பவர்களைக் குறிவைத்திருக் கிறார்கள். செண்பக பாண்டியனைக் கைதுசெய்து கோவை சிறையில் அடைத்துள்ளோம். முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த சிலருக்கும் காவல்துறையினர் சிலருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. நிறுவனத்தின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்கள்.
ஆயிரம் ‘சதுரங்க வேட்டை’ படம் வரட்டும்... பணத்தாசை பிடித்தவர்களை எப்படித்தான் திருத்துவது? ம்ஹூம்..!
