நீட் செய்த கொலை!

நீட்டின் கோரப் பல்லில் சிக்கி இன்னுமொரு மாணவி யைப் பறி கொடுத்திருக்கிறது தமிழகம்.
நெல்லையின் பாளையை ஒட்டியுள்ள அன்பு நகர், சித்தார்த் தர் ஏரியாவைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஐ.டி. நிறுவனத் தில் பணிபுரியும் அரிகிருஷ்ண னுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள். மூத்தவள் ஸ்ருதிலயா, தனியார் பள்ளியில் 2023-ஆம் ஆண்டு ப்ளஸ் 2 படிப்பை முடித்திருக்கிறார். தங்கை மெட்ரிக் பள்ளியில் படித்துவருகிறார். 2023-ஆம் ஆண்டு ப்ளஸ் 2 படிப்பை முடித்த ஸ்ருதிலயா வை மருத்துவப் படிப்பில் சேர்க்கும் பொருட்டு தந்தை அரிகிருஷ்ணன் கோச்சிங் சென்டரில் சேர்த்திருக்கிறார்.
இயல்பிலேயே நன்றாகப் படிக்கும் ஸ்ருதிலயா நீட் கோச்சிங் படிப்பிலும் சிறந்த முறையிலேயே பயிற்சியெடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய ஸ்ருதிலயா விற்கு மருத்துவ படிப்பில் இடம்கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு கடும் முயற்சிக்குப்பின் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கிறார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான முதற்கட்ட கவுன்சிலிங் நடந்து வருகிறது. மருத்துவப் படிப்பிற்கு தேர்வான வர்களுக்கான பட்டியல் வெளியான நிலையில் அதில் ஸ்ருதிலயாவின் பெயர் வரவில்லை.
இதனால் மனமுடைந்த ஸ்ருதிலயாவை பெற்றோர் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இரவு வீட்டில் தூங்கச் சென்ற ஸ்ருதிலயா, அதிகாலை அவரது அறையில் காணவில்லை யென்றதும் அவரது பெற்றோர் பதைப்புடன் தேடியிருக்கிறார்கள். வீட்டின் பின்புறமுள்ள செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஸ்ருதிலயா பிணமாக தொங்கியதைப் பார்த்திருக்கிறார்கள்.
தகவலறிந்து வந்த பெருமாள்புரம் போலீசார் ஸ்ருதிலயாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். இதுதொடர்பான அவர்களின் விசாரணையில் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றும் முதற்கட்ட ஒதுக்கீட்டில் பெயர் இடம்பெறாததால் விரக்தியடைந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்திருக்கிறது.
தன் மகள் நீட்டில் தேர்ச்சி பெற்றுவிடவேண்டும் என்று அவரை நகரிலேயே முதன்மையாக பேசப்படுகிற கோச்சிங் சென்டரில் பெற்றோர் சேர்த்திருக்கிறார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளிவந்ததில் மகள் தேர்வில் தேர்ச்சிபெற்றது தெரியவர, பெற்றோரும் ஸ்ருதிலயாவும் மிகவும் சந்தோஷமாகியிருக்கிறார்கள்.
ஆனால் மருத்துவப் படிப்பிற்கான முதற்கட்ட ஒதுக்கீட்டில் ஸ்ருதிலயாவின் பெயர் இடம்பெறாமல் போனது அவரை வெகுவாக பாதித்திருக்கிறது. எவ்வளவோ எடுத்துச்சொல்லி சமாதானப்படுத்தியும் இப்படி மகள் தற்கொலை செய்துகொண்ட சோகத்திலிருந்த பெற்றோர் நம்மிடம் பேசமறுத்துவிட்டனர்.
மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட்டே, மாணவர்களின் உயிர்கொல்லும் வியாதியாகி மரண ஓலங்களுக்குக் காரணமாகிக் கொண்டிருக் கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)