Politics
நீலப்புரட்சி, வாய்ப்புகளின் பெருங்கடல்!
- சி.பி.ராதாகிருஷ்ணன் - துணை ஜனாதிபதிநம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட

நம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமை, கடந்த 12 ஆண்டுகளில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நலிந்த, பின்தங்கிய பிரிவினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களின் வாழ்வியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை பிரதமர் ஏற்படுத்தியுள்ளார்.
பிரதமரின் அணுகுமுறை எல்லோருக்கும் முன்மாதிரியானது. நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களை, வளர்ச்சிக்கான ஆர்வமுள்ள மாவட்டங்களாக அறிவித்ததும், எல்லையோர கிராமங்களை 'துடிப்பான மற்றும் முதன்மையான கிராமங்கள்' என்று அறிவித்ததும், வடகிழக்கு பிராந்தியத்தை 'அஷ்டலட்சுமி' என்று குறிப்பிட்டதும் ஓர் உணர்வுப் பூர்வமான பாரத தேசத்தின் மீதான மாறுபட்ட பார்வைக்கும், அணுகுமுறைக்கும், ஒற்றுமைக்கும் அற்புதமான உதாரணமாக திகழ்கிறது.
இந்த அணுகுமுறை, பின்தங்கிய பகுதிகளாக இருந்த பிராந்தியங்களை முக்கியத்துவம் வா ய்ந்ததாகவும், முன்னேறுகின்ற பகுதிகளாகவும், வளர்ச்சிக்கான முனைப்பை கொண்ட பகுதிகளாகவும் மாற்றியுள்ளது. இதனால், 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற உன்னத இலக்கு எல்லா தரப்பு மக்களின் நலனையும் உள்ளடக்கிய வெற்றிகரமான, ப யணமாக அமைகிறது.
கிட்டத்தட்ட, 25 கோடி ஏழை மக்கள் கடும் வறுமையிலிருந்து விடுதலை பெற்றிருக்கின்றனர். இது ஒட்டு மொத்த மனித குலத்தின் வரலாற்றிலும் முக்கிய மைல்கல். உலகம் முழுவதும் வறுமையின் கொடுமையிலிருந்து விடுபடும் நாள் நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையை பிரதமர் விதைத்திருக்கிறார்.
பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சியை அடுத்து, பிரதமர் மோடி நீலப்புரட்சியை உருவாக்க உறுதிபூண்டு முழு கவனத்தையும் அதன்மீது செலுத்துவது மற்றொரு முன்னேற்றகரமான அம்சமாகும்.
கடுமையான பஞ்சத்தை வெற்றி கொண்டது பசுமைப் புரட்சி. பால் பற்றாக்குறை நீக்கியது, வெண்மைப்புரட்சி.
தற்போதைய நீலப்புரட்சி, மற்றொரு மகத்தான வெற்றி சரித்திரத்தை உருவாக்கப் போகிறது. வளமான கடல்சார் பாரம்பரியம் நமக்கு இருக்கிறது. ஏறக்குறைய, 24 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள கடல், இறைவன் நமக்கு கொடுத்த கருணை வரம்.
நம் மீன்பிடி நடவடிக்கைகள் பெரும்பாலும் கடற்கரைக்கு அருகிலேயே இருந்தன. இன்று, நாம் அடிவானத்திற்கு அப்பால் பார்க்க தயாராகி கொண்டு இருக்கிறோம். மீன்பிடி தொழிலில் புதிய பரிமாணங்களை காண இருக்கிறோம். இந்த நீலப்புரட்சி நம் மீனவர்களின் பொருளாதார நிலையில் ஒரு யுகப்புரட்சியாக அமைய போகிறது.
நமது சிறப்பு பொருளாதார மண்டலத்தின் ஆழ்கடல் மீன்பிடிப்பு, துனாமீன் போன்ற உயர்மதிப்புள்ள மீன்களை பிடிப்பதற்கான பெரும் வாய்ப்பாக அமைய போகிறது. 'ட்யூனா' எனப்படும் சூரை மீன்கள் மீன்களுக்கு ஜப்பானில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது .
கடந்த, 2019ம் ஆண்டில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் மூலம், நரேந்திர மோடி தலைமையின் கீழ், மீன்வள துறைக்கு முதன் முறையாக மத்திய அரசில் தனி அமைச்சகத்தை நம் நாடு பெற்றது. மத்திய அரசு, பன்முக நடவடிக்கை எடுத்து ஊக்குவித்து வருகிறது. இதனால், மீன்வள துறை, நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் துறையாக மாற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது.
இன்று மீன் உற்பத்தியில் உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக பாரத தேசம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த உலக மீன் உற்பத்தியில், 8 சதவீத பங்களிப்பை வழங்கும் நாடாக வளர்ந்திருக்கிறது.
ஏறத்தாழ, 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிப்பதோடு, நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்த துறை வழங்குகிறது. 2024 - -25ம் ஆண்டில் மீன் உற்பத்தி 195 லட்சம் டன்களுக்கும் அதிகமாக உயர்ந்து அபாரமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சரித்திர நிகழ்வு ஆழ்கடலில் மீன்பிடிப்பு என்ற புதிய சகாப்தம் பாரத தேசத்தில் முதன் முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாரத தேசத்தின் பரந்து விரிந்து கிடக்கும் ஆழ்கடலில் நம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான நவீன விஞ்ஞானத்தை இது வழங்குகிறது. ஒடிசாவில் இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று தொடங்கி வைத்ததில் பெருமை அடைகின்றேன்.
இந்த நிகழ்வில் நம் பாரத மீனவர்களுக்கு பாரத தேசத்தின் கொடியுடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடிப்பு கப்பல்களுக்கான அங்கீகார கடிதம் வழங்கப்பட்டது. இது ஒரு புதிய சரித்திரத்தின் தொடக்கமாக அமைகிறது.
கடந்த மாதம் லட்சத்தீவுக ளுக்கு நான் சென்றிருந்தபோது, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா 'யோஜனா'வின் கீழ் லட்சத்தீவிற்கான பல மீன்வள மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிகழ்வில் மத்திய மீன்வள துறை அமைச்சர்களோடு கலந்து கொண்டேன். அப்போது நம் பாரதத்தில் மீனவர்களின் எதிர்காலம் மிகப்பிரகாசமாக இருக்க போகிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.
லோக்சபாவில், ஆழ்கடல் மீன்வளத்தை தரமான முறையில் பயன்படுத்துவதற்கான சரியான திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்தார். இந்த முற்போக்கான திட்டம், நமது மீனவர்கள் புதிய எல்லைகளில் நம்பிக்கையுடன் பயணிக்க வழிவகுக்கிறது.
நமது லட்சத்தீவு மட்டும் ஏறத்தாழ, 32 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை கொண்டதாகவும், 145 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையையும், 4,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காயல் பகுதியையும் 20 ஆயிரம், சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பிராந்திய கடல் பகுதியையும் ஏறத்தாழ, 4 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் உள்ளடக்கியதாக பரந்து விரிந்துள்ளது.
பாரதத்தின் மொத்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஏறத்தாழ, ஆறில் ஒரு பங்கை லட்சத்தீவு மட்டுமே கொண்டுள்ளது. இது நமது கடல்சார் வளத்தின் வலிமையாகும். எல்லோரும் இணைந்து கூட்டாக செயல்படும் போது அது யுக புரட்சியை உண்டாக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இத்தகைய யுகப்புரட்சிதான் நீல புரட்சி என்பதில் ஐயமில்லை.
பாரதத்தின் கடல்சார் உணவு பொருட்கள் இன்று 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், நமது கடல்சார் உணவு ஏற்றுமதி 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இது, நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த, 2013 - -2014ம் ஆண்டிலிருந்து 140 சதவீதத்திற்க்கும் அதிகமான வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சி நமது கடல் உணவு பொருட்களின் தரத்தின் மீது உலகம் கொண்டுள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது.
ஆழ்கடல் மீன்பிடிப்பு முன்னெடுப்பானது, ஏற்றுமதி வளர்ச்சியில் பல மடங்கு உயர்வை தர இருக்கிறது.
டிஜிட்டல் அங்கீகார அமைப்புகள், கப்பல் கண்காணிப்பு, சர்வதேச சான்றிதழ் போன்ற நடவடிக்கைகள், உலகளாவிய சந்தைகளில், பாரத தேசத்தின் கடல்சார் உணவுகளுக்கான மதிப்பை மேலும் உயர்த்துவதற்கு உதவும்.
நாம் வளர்ச்சியைத் தொடரும் போது, இயற்கையின் மீதான நமது பொறுப்பை மறந்து விடலாகாது. கடல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்திற்கு ஊக்கமளித்து வருகிறது. இனிவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் அதனை பாதுகாப்பது நமது கடமையாகும்.
அந்த வகையில் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் அமைந்திருப்பது சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான மீன்பிடி விதிகள் மற்றும் 2025ம் ஆண்டிற்கான மீன்பிடி வழிகாட்டுதல்கள் பாரத மீனவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. மீன்பிடி கூட்டுறவு சங்கங்கள், உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் மீனவர்களுக்கு அனுமதி கடிதங்களை வழங்கியிருப்பது மீன்பிடி தொழிலில் புதிய முன்னோட்டத்திற்கு அடிகோலுகிறது .
நவீன மயமான ஆழ்கடல் மீன்பிடிப்பு, குளிரூட்டப்பட்ட சாதனங்களின் மூலமாக மீனை பதப்படுத்துவது, அதை ஏற்றுமதி தரத்தோடு பாதுகாப்பது, முறையாக 'பேக்கிங்' செய்து ஏற்றுமதி செய்வது என்ற மத்திய அரசின் சிந்தனைகள் மூலமாக பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது கடலோரம் வாழும் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
நம்பிக்கையுடன் நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்கும். அதில், நீல புரட்சியின் பங்கு மகத்தானதாக இருக்கும். இந்த நீல புரட்சி, பிரதமரின் ஆழ்மனதில் உதித்த மற்றுமோர் உயரிய சிந்தனையாகும்.