Politics
15 லட்சம் பேருக்கு வீட்டு மனை: கர்நாடக அரசு அதிரடி முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் வீடற்ற ஏழைகளுக்காக, 15 லட்சம் இலவச வீட்டு மனை வழங்க, காங்கிரஸ் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, துணை முதல்வர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிலத்தை உழுவதற்காக, வாடகைக்கு டிராக்டர்களை வாங்கி அரசை இலவசமாக உழுது தரும். இந்த திட்டத்திற்கு முதல்வரின் நெகில யோகி என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு தாலுகாவில் இத்திட்டத்தை முன்னோட்ட அடிப்படையில் துவக்குகிறோம். இதற்கு, 152 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
வீடற்ற ஏழைகளுக்காக 15 லட்சம் இலவச வீட்டு மனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு மனைகளை அடையாளம் காண கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது 10,000 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அக்டோபர் மாதத்திற்குள் 5 லட்சம் வீட்டுமனைகள் பயனாளிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டு மனைகள் ஒதுக்கப்படும்.
விண்வெளி கொள்கை தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக, 'ஷ்ராமிக் நிவாஸ்' என்ற திட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படும். 2026 - 2031 ம் ஆண்டுக்கான கர்நாடக விண்வெளி கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
விண்வெளி, பாதுகாப்பு, விமான உற்பத்தி, புத்தாக்கம் துறைகளில் கர்நாடகாவை மையமாக மாற்றுவது இந்த கொள்கையின் குறிக்கோள்.
அடுத்த 5 ஆண்டுகளில் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இது 60,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இலகுரக விமானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்கள், மானியம் வழங்கப்படும்.
இது தவிர, நாட்டிலேயே முதன்முறையாக சிக்கபல்லாபூரில் டிரோன் சோதனை வசதி மையம் நிறுவப்படும். இதற்கு 42.83 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புதிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.
மாணவர் சங்க தேர்தல் பெங்களூரு ஐ.ஐ.ஐ.டி., யில் செயற்கை நுண்ணறிவு மையம் துவங்க 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு; சக்தி திட்டத்தில் பெண் பயணிகளுக்கு ஸ்மார்ட் கார்டு விநியோகிக்க 237 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
மாணவர்களிடையே தலைமைத்துவம், பொறுப்புணர்வு, ஜனநாயக விழுமியங்களை வளர்க்கும் நோக்கில், கல்லுாரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வீட்டு மனை வழங்குவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.