Arts, culture, entertainment and media
சோழக்கூரில் குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை

காட்டுமன்னார்கோவில்:சோழக்கூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சோழக்கூர் ஊராட்சி காலனியில் 700 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த போர்வெல் பழுதடைந்து, காவி நிறத்தோடு, துர்நாற்றத்தோடு குடிநீர் வருவதால், அதனை மக்கள் பயன்படுத்த முடியவில்லை. இதனால், கிராம மக்கள் கடந்த 6 மாதங்களாக குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீரை விலைக்கு வாங்கியும், அருகாமை கிராமங்களில் உள்ள பொது குழாயிலம் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
சோழக்கூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை குறித்து பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், அதிருப்தி அடைந்த கிராம மக்கள் நேற்று விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் துணை பி.டி.ஓ., சசிக்குமார், ஊராட்சி செயலர் செல்வகணபதி ஆகியோர் உடனடியாக அருகில் உள்ள வாட்டர் டேங்கில் இருந்து வழங்கவும், இந்த பகுதிக்கு புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்ட கலெக்டரிடம் முன்மொழிவு பெற்று விரைவில் பணி துவக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.