Crime, law and justice
சிறுவனை நிர்வாணப்படுத்தி... மிளகாய்ப்பொடி தூவி... தூத்துக்குடி பள்ளியில் அரங்கேறிய கொடூரம்!

மிளகாய்ப்பொடியின் எரிச்சலைத் தாங்க முடியாமல் அவர் அலறியபோதுதான், வகுப்பாசிரியை வந்து விசாரித்ததில், 7-ம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே இந்தக் கொடுமை தொடர்ந்துவந்தது தெரியவந்திருக்கிறது.
பாடம் நடக்கவேண்டிய வகுப்பறை... ஒரு சிறுவனுக்கு சித்ரவதை அறையாக மாறியிருக்கிறது! கேலி, கிண்டலில் தொடங்கி பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், தாக்குதல் என ஓராண்டாக சக மாணவர்களே ஒரு சிறுவனைச் சித்ரவதை செய்திருக்கின்றனர். சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்ட சிறுவனின் அலறலைக் கேட்ட ஆசிரியர் தலையிட்ட பிறகே, இந்தக் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 9 மாணவர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
கிண்டல், கேலி பெயரில் சித்ரவதை!
தூத்துக்குடி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில்தான் இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறி அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``பாதிக்கப்பட்ட மாணவரின் தோற்றம், நடை, பாவனைகள் சற்று சிறுமியைப்போல இருந்ததால், சக மாணவர்கள் ஆரம்பம் முதலே அவரைக் கேலி, கிண்டல் செய்து, தனித்தனியாகப் பெயர் வைத்து அழைத்திருக்கின்றனர். பின்னர் ஒரு மாணவர் பாலியல்ரீதியாக அவரைத் துன்புறுத்தியதுடன், இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். இந்த விவகாரம் அடுத்தடுத்து மற்ற மாணவர்களுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் 9 மாணவர்கள் சேர்ந்து தொடர்ந்து அந்த மாணவரைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் துன்புறுத்தல் சித்ரவதையாக மாறியிருக்கிறது. அடிப்பது, மிதிப்பது, ரப்பர் பேண்டால் ஆணுறுப்பில் சுண்டுவது, பபுள்காமை ஒட்டுவது, மரம், இரும்பு ஸ்கேலால் தாக்குவது எனக் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். சில நால்களுக்கு முன்பு மாணவரை நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பில் மிளகாய்ப்பொடியைத் தூவியிருக்கின்றனர். மாணவர் துடித்தபோது கை கால்களைப் பிடித்தும், சத்தம் வெளியே வராமல் வாயைப் பொத்தியும்கூட கொடூரத்தைத் தொடர்ந்திருக்கின்றனர். இதனால் இரண்டு நாள்கள் பள்ளிக்கு வராத மாணவர், மீண்டும் பள்ளிக்கு வந்தபோதும் அதே கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்.
ஆசிரியர் பார்த்த காட்சி..!
மிளகாய்ப்பொடியின் எரிச்சலைத் தாங்க முடியாமல் அவர் அலறியபோதுதான், வகுப்பாசிரியை வந்து விசாரித்ததில், 7-ம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே இந்தக் கொடுமை தொடர்ந்துவந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி முதற்கட்டமாக 5 மாணவர்களைக் கைதுசெய்திருக்கின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 4 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 9 மாணவர்கள்மீது போக்சோ சட்டத்தின் கீழ் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது” என்றனர்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணியிடம் பேசினோம். “இப்படியொரு சம்பவம் நடந்தது வகுப்பாசிரியை மூலம்தான் எனக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் விரிவான அறிக்கை கேட்டிருக்கிறார். தலைமை ஆசிரியையிடமும் விளக்கமும் அறிக்கையும் கேட்கப்பட்டிருக்கின்றன. அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சக ஆசிரியைகள், 8-ம் வகுப்பு மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக, குழந்தைகள் நலக்குழு மற்றும் சிங்கப்பெண் அதிரடிப் படை மூலம் பள்ளியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.
வீட்டிலும் பள்ளியிலும் கண்காணிப்பு அவசியம்!
இது பற்றி தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசைலத்திடம் பேசினோம். “10 முதல் 13 வயது பருவத்தில் மாணவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கின்றன. அதேநேரம், சமூக வலைதளங்களில் பாலியல் சார்ந்த படங்கள், வீடியோக்களைப் பார்க்கும் பழக்கமும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஆர்வம் தூண்டப்பட்டு, ‘செய்துதான் பார்த்தால் என்ன?’ என்ற மனநிலை சிலரிடம் உருவாகலாம். குறிப்பாக, தங்கள் வயதை ஒத்த அல்லது குறைவான வயதுடையவர்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீற முயலும் நிலைக்கும் தள்ளப்படலாம்.
இப்படியான மாணவர்களை, சக மாணவர்கள் எளிதில் குறிவைத்து பாலியல்ரீதியாகத் தூண்டவோ, அத்துமீறலுக்கு அழைக்கவோ வாய்ப்பிருக்கிறது. இந்தச் சம்பவத்திலும் ஒரு மாணவர் முதலில் சீண்ட, அடுத்தடுத்த மாணவர்கள் குழு மனப்பான்மையுடன் இணைந்திருக்கலாம். ‘கூட்டமாக இருந்தால் பாதுகாப்பு’ என்ற எண்ணம், குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான துணிச்சலை அவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். இதில் சில மாணவர்களுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கமும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
தற்போது வெளிச்சத்துக்கு வந்திருப்பது பனிப்பாறையில் விழுந்த ஒரு பனித்துளி மட்டுமே. இது போன்ற சம்பவங்கள் பல பள்ளிகளில் மறைமுகமாக நடந்துகொண்டிருக்கலாம். எனவே, பள்ளிகளில் நல்லொழுக்கக் கல்வி, பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும். மாவட்டம்தோறும் பள்ளிக்கல்வித்துறையும், மனநல மருத்துவர்களும் இணைந்து மாணவர்களின் நடத்தையைக் கண்காணிக்கும் குழுக்களை அமைக்க வேண்டும். அதேபோல், பெற்றோர்களும் குழந்தைகளின் நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள், அவர்கள் பழகும் நண்பர்கள் குறித்துத் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
எங்கே போகிறது சமூகம்?
