முதல் போக சாகுபடியை கருதி அணையில் தண்ணீர் பெறும் அளவை குறைக்க வேண்டும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கம்பம், செப். 12 முதல் போக நெல் சாகுபடியை கவனத்தில் கொண்டு அணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் அளவை குறைக்க
முதல் போக நெல் சாகுபடியை கவனத்தில் கொண்டு அணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் அளவை குறைக்க நீர்வளத் துறை முன்வர கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூர் முதல் பழனிச்செட்டிபட்டி வரை 14,7070 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப் பெரியாறு பாசனத்தில் நடைபெறும் இருபோக சாகுபடி கடந்த 5 ஆண்டுகளாக பிரச்னையில்லாமல் நடந்தது.
இந்தாண்டு எல்நினோ தாக்கம் காரணமாக ஜுனில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக பெய்தது. விவசாயிகளும் முதல் போக சாகுபடியை தாமதமாக துவக்கி உள்ளனர். தற்போது நடவு செய்து ஒரு மாதத்தை கடந்துள்ளது. உத்தமபாளையத்தில் நடவு பணியை இப்போது தான் துவக்கி உள்ளனர்.
எனவே கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்கு இன்னமும் குறைந்தது 100 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும். ஆனால் நீர்வளத் துறையினரின் நடவடிக்கைகளால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு முதல் போக சாகுபடி எடுக்க முடியாத நிலை உருவாகும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.
இன்னும் நுாறு நாட்களுக்கு நீர் தேவை இது தொடர்பாக கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கம் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணையின் தற்போது நீர் மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையிலிருந்து 800 கன அடி விநாடிக்கு விடுவிக்கப்படுகிறது. வரத்து விநாடிக்கு 102 கன அடியாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் நடவு செய்துள்ள முதல் போகத்திற்கு இன்னமும் 100 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படும். ஆனால் தற்போது எடுக்கும் அளவு நீடித்தால் 60 நாட்களுக்கு கூட தண்ணீர் கிடைக்காது. இதனால் மகசூல் பாதிக்கும்.
வைகை அணை 39.50 அடி நீர் மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 207 கன அடி வரத்தும்,
அணையிலிருந்து விநாடிக்கு 126 கன அடி விடுவிக்கப்படுகிறது. வைகை பாசனத்தில் தற்போது விவசாயம் நடைபெறவில்லை. குடிநீர் தேவை மட்டுமே உள்ளது. தற்போதுள்ள நீர்மட்டமே குடிநீர் தேவைக்கு போதுமானது.
எதற்காக அதிக வெளியேற்றம் இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து எதற்காக விநாடிக்கு 800 கன அடி வெளியேற்றப்படுகிறது என தெரியவில்லை. எனவே கம்பம் பள்ளத்துக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் போக நெல் சாகுபடியை கவனத்தில் கொண்டு, அணையிலிருந்து எடுக்கும் நீரின் அளவை உடனடியாக குறைக்க நீர்வளத்துறை முன்வர வேண்டும். இதில் எடுக்கும் 800 கன அடி தண்ணீரில் 200 கன அடியே வைகைக்கு செல்கிறது. மீதமுள்ள 600 கன அடி தண்ணீர் என்ன ஆகிறது என்பது பற்றி நீர்வளத்துறை கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.