கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி ஆசிரியை பலி; ஆசிரியர் மாயம்
எண்ணுார்: கடலில் குளிக்கும்போது, அலையில் சிக்கி கலையரசி, 26, என்ற ஆசிரியை பரிதாபமாக பலியானார். மாயமான ஆசிரியரை தேடும் பணி நடக்கிறது.
சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள ‘அன்னம்மாள் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்’ எனும் தனியார் கல்வி நிறுவனத்தில் துறை தலைவராக பணிபுரிந்தவர் கரூரைச் சேர்ந்த நவீன், 28.
அதே கல்வி நிறுவனத்தில், எண்ணுார், தாழங்குப்பத்தைச் சேர்ந்த கலையரசி, 26, வேலுாரைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர் ஆசிரியராக பணிபுரிந்தனர்.
நேற்று முன்தினம், விடுமுறை தினம் என்பதால், நவீன் மற்றும் கார்த்திக் ஆகியோர், எண்ணுாரிலுள்ள கலையரசி வீட்டிற்கு, மதிய உணவு சாப்பிட சென்றுள்ளனர். பின், மாலையில், நவீன், கார்த்திக், கலையரசி மற்றும் அவரது தங்கை கவுசல்யா ஆகியோர், தாழங்குப்பம் கடற்கரையில் பொழுது போக்க சென்றனர்.
அங்கு, நவீன், கார்த்திக் மற்றும் கலையரசி கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, அலையில் சிக்கி மூன்று பேரும் தத்தளித்தனர். இதில், கார்த்திக் மட்டும் தட்டு தடுமாறி, கரை வந்து சேர்ந்தார். மற்ற இருவரும் நீரில் மூழ்கினர்.
அப்பகுதி மீனவர்கள் இருவரையும் மீட்க முயற்சித்தனர். இதில், கலையரசி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாயமான நவீனை, எண்ணுார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி மீனவர்கள் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து, எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
